அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தை இன்று (ஏப்ரல் 14) காலி செய்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பெயர் குறித்து பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் ராகுல்காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது சூரத் நீதிமன்றம்.
இதனையடுத்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் டெல்லியில் துக்ளக் லேனில் உள்ள ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து வரும் 22ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு கோரப்பட்டது.
அதன்படி வீட்டைக் காலி செய்ய ராகுல் காந்தி ஒப்புக்கொண்ட நிலையில், அந்த வீட்டை ஒப்படைக்க சிறிது நேரம் எடுக்கும் என்றும், எனினும் கடைசி தேதிக்கு முன்னதாக காலி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது
இதற்கிடையே சிறைதண்டனையை எதிர்த்து மேல்முறையீடு பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் ராகுல்காந்தி, சமீபத்தில் தான் எம்பியாக இருந்த வயநாட்டிற்கு சென்று தொண்டர்களை சந்தித்தார்.
பின்னர் டெல்லி திரும்பிய அவர் இன்று தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்து உடைமைகளுடன் வெளியேறினார்.
இரண்டு லாரிகளில் அவரது உடைமைகள் ஏற்றப்பட்டு, அவரது தாயாரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான 10 ஜன்பத் சாலையில் வசிக்கும் சோனியா காந்தியின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
மத்திய அரசு அறிவித்தபடி வீட்டை காலி செய்வதற்கு இன்னும் எட்டு நாட்கள் உள்ள நிலையில் இன்றே தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார் ராகுல்காந்தி.
இதற்கிடையே அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீதான தீர்ப்பினை வரும் 20-ஆம் தேதி அறிவிப்பதாக சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன்!