கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 18) மாலை நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி அனுப்பியுள்ள கடிதத்தில், “கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளில், தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது பெருமையை நினைவு கூறும் வகையில், நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது சமூக முற்போக்கான தொலைநோக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழிவகுத்தது.
கலைஞரின் தலைமையின் கீழ், தமிழ்நாடு ஒரு தைரியமான மற்றும் லட்சியமான மாற்றத்திற்கான பாதையில் சென்றது.
அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை ஒரு முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்த உதவியது. மேலும், பல மாநிலங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது.
அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்பதில் தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் உள்ள ஸ்டாலினை இந்த நேரத்தில் நான் பாராட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பிய ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்களே, கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவின் முக்கியத்துவம் குறித்த உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. அவரது கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
சிகாகோவில் ஸ்டாலினை சந்திக்க விருப்பமா? முன்பதிவு செய்வது எப்படி?