கல்விக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் மயமாக்க பாஜக முயற்சிக்கிறார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (பிப்ரவரி 6) குற்றம்சாட்டியுள்ளார். Rahul Gandhi says RSS
யுஜிசி திருத்த விதிகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது,
“இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கலாச்சாரம், பன்மைத்துவத்தை அழித்தொழிப்பது தான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஒரே நோக்கம்.இதைத்தான் நான் தொடர்ந்து கூறிவருகிறேன். அவர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்.
ஒரே வரலாறு, கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள். யுஜிசி திருத்த விதியை ஒவ்வொரு மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு மாநிலங்களின் மீதான அவர்களது அடுத்த தாக்குதலாகும்.

ஒவ்வொரு மாநிலங்களுக்கென்ற தனித்த அடையாளம், வரலாறு, கலாச்சாரம், மொழி, பண்பாடு இருக்கிறது. அதனால் தான் இந்தியாவை ‘யுனியன் ஆஃப் ஸ்டேட்’ என்று அழைக்கிறோம். அதனால் மற்ற மாநிலங்களின் கலாச்சாரத்தையும் நாம் மதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் மற்ற மாநிலங்களை மதிக்கிறது.
4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் தமிழக மக்கள். தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களின் கல்விக்கூடங்களையும் ஆர்.எஸ்.எஸ் மயமாக்க பாஜக முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூறியதைப்போல, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார். Rahul Gandhi says RSS