மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல்முறையாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பிரதமர் மோடி இன்று எழுந்து நின்று பதிலளித்துள்ளார்.
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் தொடர்ந்து ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று மதியம் குடியரசு தலைவர் உரை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்திய அரசியலமைப்பின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். சில எதிர்க்கட்சி தலைவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள்.
அதிகாரத்தை எதிர்த்து பேசுபவர்கள், ஏழைகள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையின் மீதான தாக்குதலை கண்டித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதமர் மோடியின் உத்தரவால், நான் தாக்கப்பட்டேன். அமலாக்கத்துறை என்னிடம் 55 மணி நேரம் விசாரணை நடத்தியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதை நான் மிகவும் என்ஜாய் செய்தேன்.
காந்தி திரைப்படத்தின் மூலமாகத் தான் மகாத்மா காந்தி பற்றி அனைவரும் அறிந்து கொண்டார்கள் என்று மோடி பேசியிருக்கிறார். இது அவரது அறியாமையை வெளிக்காட்டுகிறது.
இங்கு ஒரு மதம் மட்டுமே தைரியத்தைப் பற்றி பேசுவதில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. தங்களை இந்து என்று பெருமையாக சொல்லிக்கொள்பவர்கள், வன்முறை, வெறுப்பை பரப்புகிறார்கள், உண்மையை பேசுவதில்லை. மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்து சமுதாயம் அல்ல” என்று பேசினார்.
உடனடியாக அவையில் எழுந்து பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை, ஜனநாயகமும் அரசியல் சாசனமும் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த இந்து மதத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது துரதிருஷ்டமான ஒன்று” என கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தங்களை இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள், வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்து என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது ராகுல் காந்திக்கு தெரியாது. எந்த மதத்துடனும் வன்முறையை தொடர்புபடுத்துவது என்பது தவறான ஒன்று. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று காட்டமாக பேசினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம்
ராகுல் ரூட்டில் செல்வப்பெருந்தகை: தமிழகம் முழுவதும் நடைபயணம்!