வயநாடு நிலச்சரிவு… “தந்தையை இழந்த துக்கத்தை தற்போது உணர்கிறேன்” – ராகுல் எமோஷனல்!

Published On:

| By Selvam

“எனது தந்தையை இழந்தபோது எப்படி துக்கமடைந்தேனோ, அதே துக்கத்தை தான் தற்போதும் உணர்கிறேன்” என்று வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின்பு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி, “இது வயநாட்டிற்கும், தேசத்திற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மிக சோகமான ஒரு தருணமாகும். நிலைமையை பார்க்கவே இங்கு வந்துள்ளோம்.

இங்குள்ள மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்வோம். பலர் இந்த பகுதியிலிருந்து இடமாற்றம் செய்து வேறு இடத்திற்கு செல்ல விரும்புகின்றனர். இங்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில் கடுமையாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இது ஒரு தேசிய பேரிடர். அரசியல் பேச இது சரியான இடம் இல்லை என்று நான் நினைக்கிறேன். இங்குள்ள மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டிய நேரம் இது. நான் வயநாடு மக்களுடன் உறுதியாக இருக்கிறேன்.

என் தந்தையை இழந்தபோது எப்படி துக்கமடைந்தேனோ அதே துக்கத்தை தான் தற்போதும் உணர்கிறேன். இங்குள்ள மக்கள் தந்தையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துள்ளனர்.

இந்த மக்களை நாம் அன்போடும் கனிவோடும் அணுக வேண்டும். ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் வயநாடு பக்கம் திரும்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி பேசும்போது, “ஒரு நாள் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம். இது ஒரு மிகப்பெரிய சோகம். நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் பிரச்சனைகளை சந்தித்துள்ளார்கள். நாங்கள் எங்கள் ஆதரவையும், ஆறுதலையும் கொடுப்பதற்காகவே இங்கு இருக்கிறோம்.

இமாச்சல பிரதேசத்திலும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. தாய், தந்தையரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு எப்படி உதவலாம் என்று நாளை திட்டமிட உள்ளோம்” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராகுலின் சாதியை இழுத்த பாஜக எம்.பி…டிசைன் டிசைனாய் சர்ச்சைகள்…யார் இந்த அனுராக் தாக்கூர்?

என்ன நண்பா ரெடியா? ‘கோட்’ மூன்றாவது சிங்கில் ரிலீஸ் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel