விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து இன்று டெல்லியில் (செப்டம்பர் 4) நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் பாஜக அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்றது.
அதில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது, “பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-ம் இணைந்து நாட்டைப் பிரிக்கிறார்கள்.
மக்கள் அவர்களது எதிர்காலம், பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்துப் பயப்படுகிறார்கள். இதனால் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பும், கோபமும் அதிகரித்துள்ளது.
மோடி அரசின் கொள்கைகள் இரண்டு பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பலனளித்து வருகின்றன.
அவர் தனது நண்பர்களுக்குச் சம்பாதித்துத் தருவதற்காக ஓய்வில்லாமல் உழைக்கிறார். இரு கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு பாஜக அரசு அனைத்து சலுகைகளையும் கொடுத்து வருகிறது.
மக்களோ விலைவாசி உயர்வால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது விவசாயிகளின் நலனுக்காக இல்லை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத் தான் கொண்டு வரப்பட்டது.
ஆனால் விவசாயிகள் சாலையில் இறங்கி அவர்களது சக்தி என்னவென்று அரசுக்கு காண்பித்தனர்.
நாட்டில் சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் பிரதமர் மூடுவிழா நடத்தி வருகிறார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
கார்பரேட் முதலாளிகளும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை. இந்த நாடு இரண்டு பேருக்குச் சொந்தமானது அல்ல, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.
அதுமட்டுமில்லாமல், காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 70 ஆண்டுகளில், தற்போது உள்ளது போன்ற விலைவாசி உயர்வு இருந்ததில்லை.
பணவீக்கத்தால் இப்போது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைகளுக்குப் பிரதமர் மட்டுமே பொறுப்பு” என்று கூறினார்.
மோனிஷா
Comments are closed.