நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் இன்று (மார்ச் 23 ) உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோடி, லலித் மோடி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோடி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
“எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை,” என ராகுல் காந்தி பேசினார்.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு அந்த நேரத்தில் பாஜக தரப்பில் இருந்து கண்டனங்களும் , எதிர்ப்புகளும் கிளம்பின.
ராகுல் காந்தி பேசிய கருத்துகளுக்காக குஜராத்தின் முந்தைய புபேந்திர பால் அரசில் அமைச்சராக இருந்தவரும் தற்போதைய பாஜக எம்.எல்.ஏ-வுமான புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்தார். இந்நிலையில், தனது வாதத்தை பதிவு செய்வதற்காக 2021 அக்டோபர் மாதம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.
அப்போது “ராகுல் பேசிய இந்த வார்த்தைகளால் மனது புண்பட்டு வழக்கு தொடர வேண்டும் என்றால் நரேந்திர மோடி தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். கர்நாடகாவில் மக்களவை தேர்தலின் போது ராகுல் பேசியது நரேந்திர மோடியைத்தான் . அவர் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் தாக்கி பேசவில்லை” என்று ராகுல் காந்தி தரப்பு கூறியது.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெ.ஹெ. வர்மா மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார்.
இதனிடையே, சூரத் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 23 ) ராகுல்காந்தி நேரில் ஆஜரானர். அவரை வரவேற்பதற்காக குஜராத் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாரத் ஜோடோ யாத்திரையின் போது முழு தாடியுடன் இருந்த ராகுலின் புகைப்படங்களை இந்தியாவின் சிங்கமே வருக என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் அடித்து சூரத் முழுவதும் ஒட்டினர்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 23)தீர்ப்பை வாசித்த நீதிபதி அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்தார். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் படி ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
அதே சமயம் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த சிறை தண்டனையை முப்பது நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் புர்னேஷ் மோடி, ”இந்த முடிவை மனதார வரவேற்கிறோம். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறீர்களா என்பது கேள்வியல்ல. இது சமூகம் சார்ந்த விவகாரம். மேலும் சமூகம், சாதி போன்றவற்றுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறக் கூடாது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தண்டனை அறிவிக்கப்பட்டதும், “என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை.” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு ரிப்பன் கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ”தண்டனையை எதிர்த்துப் போராட சட்டப்பூர்வ வழியை கட்சி எடுக்கும்” என்றார். மேலும், “ராகுலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் தெரியும். அவர்கள் நீதிபதிகளை மாற்றிக்கொண்டே இருந்தனர். நாங்கள் சட்டம், நீதித்துறையில் நம்பிக்கை வைத்துள்ளோம், இந்த தீர்ப்பிற்கு எதிராக சட்டப்படி போராடுவோம்,” என்று கூறினார்.
ராகுலின் சகோதரியும் , காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, “அதிகாரத்தின் ஒட்டுமொத்த சக்தியும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயற்சிக்கிறது. என் சகோதரர் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டார். உண்மையைப் பேசி வாழ்ந்தார், தொடர்ந்து உண்மையைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம் என்றும் உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவரிடம் உள்ளன” என்று கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் 2019 ல் மக்களவைத்தேர்தல் நடந்த போது ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு இப்போது கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் களத்தில் இந்த விவகாரம் முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையையும் பிரச்சாரத்திற்கான ஆயுதமாக மாற்றியுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பதான் ஓடிடி வெர்ஷன்: ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
“ராகுல் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்”: செல்வ பெருந்தகை