அதானி குழும முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி விசாரிக்க தயங்குவது ஏன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 31) கேள்வி எழுப்பி உள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அதன்படி, காங்கிரஸ், திமுக என இந்தியா முழுவதும் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன.
இச்சூழலில் இந்திய கூட்டணியின் 3 வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
முன்னதாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அதானி குழும முறைகேடு தொடர்பாக 2 நாளேடுகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், “அதானி குழும பங்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஓசிசிஆர்பி (OCCRP) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் பிரபலமான ஃபைனான்சியல் டைம்ஸ், கார்டியன் போன்றவை அதானி குழும முறைகேடுகள் குறித்து விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.
மோடிக்கு நெருக்கமான குடும்பம் அதானி குழும நிறுவனங்களில் முறைகேடாக முதலீடு செய்துள்ளது என்று சர்வதேச பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன. முறைகேடாக செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்த்தப்பட்டன.
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக சென்று பின்னர் முறைகேடாக அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மட்டுமின்றி சீனாவைச் சேர்ந்த சாங் சுங் லிங்க் மற்றும் நாசர் அலி ஆகிய இருவரும் அதானி குழும முறைகேடுகளில் முக்கிய பங்காற்றி உள்ளனர்.அதானி குழுமத்தில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.
பிரதமருக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் மூலம் இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு நாடுகள் வழியாகச் சென்று மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் யாருடைய பணம்? அதானியுடையதா அல்லது வேறு யாருடையது? விமான நிலையங்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய கட்டமைப்புகளை நிர்வகிக்கும் அதானி நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்தவர் முதலீடு செய்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி , “சீனாவைச் சேர்ந்தவரின் முதலீட்டை இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் அதானி நிறுவனத்தில் அனுமதித்தது எப்படி? செபி அமைப்பில் இருந்து விலகியவருக்கு அதானி நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பு தந்தது எப்படி? அதானி நிறுவனத்தில் இயக்குநராக உள்ள ஒருவர் செபி அதிகாரியாக இருந்தபோது நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?
எனவே அதானி குழும முறைகேடுகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அதானி குழும முறைகேடு பற்றி செபி விசாரணை நடத்தவில்லை என்பதையே இந்த நியமனம் காட்டுகிறது. அதானியால் விசாரணையை தடுத்திருக்க முடியாது. பிரதமர் விரும்பாததால் செபி விசாரணை நடத்தவில்லை.
அதானி குழுமம் பற்றி நான் பேசுவதால் பிரதமர் அச்சம் அடைந்துள்ளார். அதானியுடன் உள்ள நெருக்கம் காரணமாகவே அவரைப் பற்றி பேசினாலே பதற்றம் ஏற்படுகிறது. இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் மட்டும் ஏன் இலவச சவாரி செய்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதானி குழும முறைகேடுகள் என்பது இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்டது. அதானி விவகாரம் இந்திய பொருளாதாரம் மீதான நம்பகத்தன்மையை பாதிக்கிறது. பொருளாதார முறைகேடு என்பது தனிநபர் சார்ந்த பிரச்சினை அல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை.
இந்திய தொழில் நிறுவனங்கள் சமநிலையில் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதானி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்? பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்? இதில் தனக்கு தொடர்பு இல்லை என்பதை பிரதமர் மோடி நிரூபிக்க வேண்டும்.
இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.உலகளவில் இந்தியாவின் மதிப்பை உறுதி செய்யும் ஜி20 மாநாட்டுக்காக தலைவர்கள் வரும் இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது அவசியம். வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கத் தவறினால் ஜி20 மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் அது குறித்து கேள்வி எழுப்ப நேரிடும்” என்றார்.
மேலும், “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது பிரதமர் மோடிக்கு ஏற்பட்டிருக்கும் பதற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது அவருக்கு பதற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே, எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி திடீரென ரத்தானது. தற்போதைய அதானி விவகாரம், பிரதமருக்கு மிக நெருக்கமாக இருப்பதால், அவர் பதற்றத்தில் இருப்பதாக நினைக்கிறேன். அதானி விவகாரத்தை தொடும்போதெல்லாம், பிரதமர் மிகவும் சங்கடமாகவும், மிகவும் பதற்றமாகவும் இருக்கிறார்” என்றார் ராகுல் காந்தி.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விநாயகர் சதுர்த்தி விடுமுறை : அரசு சொன்ன குட் நியூஸ்!
தலைமையின் விசாரணை பிடியில் நெல்லை மேயர் சரவணன்
ஏனெனில் அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் அனைவரும் பிஜேபி முக்கிய தலைவர்கள் தான் அதனால்தான் தயங்குகிறார்கள்…… பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதானி என்கிற ஒரு தொழிலதிபர் மக்கள் கவனத்திற்கு வரப்பெற்றார் பிறகு உலக அளவில் மிகப்பெரிய பணக்காரராக அறியப்பட்டார்