.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது பாரத் ஜூடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி இதைத் தொடங்குகிறார் ராகுல் காந்தி.
இதற்குமுன்பே, தமிழகத்தில் சில கட்சித் தலைவர்கள் சில பிரச்சினைகளுக்காக நடைப்பயணம் மேற்கொண்டனர். அந்த நடைப்பயண அரசியல் வரலாறுகள் சிலவற்றை இப்போது திரும்பிப் பார்ப்போம்.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாக இருந்த கலைஞர், எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிராக, ’நீதிகேட்டு நெடும்பயணம்’ மேற்கொண்டது தமிழக அரசியலில் இன்றுவரை பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் விவகாரம்; எம்.ஜி.ஆர். ஆய்வு!
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது… திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை, 1980ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, தாம் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், திருச்செந்தூர் கோயிலில் நடந்த உண்டியல் முறைகேடு குறித்து, அரசிடம் புகார் செய்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த சம்பவத்தில் அப்போதைய இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரால் தமிழக அரசியலில் பெரும்புயலே வீசியது.
இதே ஆர்.எம்.வீரப்பன் பின்னாளில் கலைஞருடன் இணக்கமாக இருந்ததும் தனிக்கதை.
இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார்.
இந்த ஆணையம் விசாரணை நடத்தி 288 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எம்.ஜி.ஆரிடம் சமர்ப்பித்தது. இந்த விவாதம் தொடர்பாக 1982 பிப்ரவரி 2ம் தேதி சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.
’இந்த அறிக்கையை சட்டப்பேரவையில் வெளியிட வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அரசு வெளியிடவில்லை.
சட்டசபையில் கலைஞரின் நெடிய உரை!
சட்டசபையில் நீதிகேட்டு உரையாற்றிய கலைஞர், ஒரு கையில் பால் கமிஷன் அறிக்கையைத் தூக்கிக் காட்டி, ‘இது பால்’ என்று கூறி, மறுகையில், அன்றைய தினம் பால் கமிஷன் அறிக்கைக்கு அரசு சார்பில் தரப்பட்ட மறுப்பு அறிக்கையைத் தூக்கிக் காட்டி, ‘இது விஷம்’ எனக் குறிப்பிட்டு, “நல்லவேளையாக, இரண்டையும் கலக்காமல் தனித்தனியாக வைத்திருக்கிறீர்கள்.
மறுப்பறிக்கையைத் திரும்பப் பெறுங்கள். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள்” என்றார். மேலும் அவர், “கொலையாளிகள் மீது 1982 பிப்ரவரி 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அன்றைய தினமே மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நீதி கேட்டு 200 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் செல்வேன்” என அறிவித்தார்.
பின்னர் இந்த பிரச்சினைக்கு தம்முடைய எதிர்ப்பைக் காட்டும் விதமாக கலைஞர் திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பும் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர், “நாங்கள் வெளிநடப்பு செய்தபிறகு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பே.
உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்து, சிபிஐ போன்ற அமைப்புகளால் புலனாய்வு செய்யும் நிலைமையை மாநில அரசே கேட்டுப் பெற வேண்டும்.
கொலை நடந்துபோது, நான்கூட சிபிசிஐடி புலன் விசாரணை போதுமானது என்று கூறினேன். சிபிஐ விசாரணைதான் வேண்டுமென்பது என்னுடைய நோக்கமுமல்ல.
ஆனால் கொலைகாரர்களைத் தப்புவிக்க அரசின் சார்பிலும் அமைச்சர்களின் சார்பிலும் நடைபெறும் காரியங்களைப் பார்க்கும்போது சிபிஐ விசாரணை தவிர்க்க முடியாதது ஆகிறது” என விளக்கினார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள், “திட்டமிட்டபடி, நீதி கேட்டு, நெடிய பயணம் உண்டா” எனக் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த கலைஞர், “இந்த ஆட்சியில் நீதியே இல்லை… அதனால் நெடிய பயணம் உண்டு” என்றார்.
மேலும் அவர், “இந்த நெடிய பயணம் காரிலோ; வேறு வாகனத்திலோ அல்ல. அவ்வளவு தூரமும் கழகத் தோழர்களுடன் நடந்தே செல்வேன்” என்றார்.
கலைஞர் வெளியிட்ட அறிக்கை!
அதேநேரத்தில், இந்த பால் கமிஷன் அறிக்கை தொடர்பாக அப்போதைய திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘சட்டமன்றத்தில் பால் கமிஷன் தொடர்பாக பிப்ரவரி 15, 1982க்குள் மேல்நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், தலைவர் கலைஞர் தலைமையில் நீதிகேட்டு நெடும்பயணம் நடத்தப்படும்’ என அறிவித்திருந்தார்.
அதாவது, சட்டமன்றத்தில் பிப்ரவரி 13, (1982) நடைபெறும் விவாதத்தில் எம்.ஜி.ஆர் உரிய நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்த்து, அந்த நெடிய பயணத்துக்கு 15ம் தேதியை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர், அப்போது தமிழக அரசின் மொழிபெயர்ப்பு பிரிவில் அதிகாரியாக இருந்த சதாசிவன் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் மூலம், விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலை வெளியிட்டார்.
விசாரணை ஆணைய அறிக்கை நகலை தந்த அந்த சண்முகநாதன் வேறு யாருமல்ல. கலைஞர் மறையும் வரையிலும் அவர் பின்னால் நின்று குறிப்பெடுத்த உதவியாளர்தான் இந்த சண்முகநாதன்.
திட்டமிட்டபடி கலைஞர் நடைப்பயணம்!
கலைஞர் கையில் இந்த அறிக்கை கிடைத்தது எப்படி என்ற கேள்வி, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
இதுதொடர்பாக, கலைஞர் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அவருக்கு அறிக்கை தந்த அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டனர்.
அதேநேரத்தில், நீதிபதி சி.ஜே.ஆர்.பால் ஆணைய அறிக்கையில், ‘அறநிலையத் துறை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை செய்யவில்லை.கொலை செய்யப்பட்டார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கலைஞர் முன்வைத்தார்.
திருச்செந்தூரில் சுப்பிரமணியன் வதம்
ஆனால், அதிமுக அரசு கலைஞர் பேச்சை செவியெடுக்காததால், திட்டமிட்டபடி, நீதி கேட்டு நெடும் பயணத்தை கலைஞர் 1982 பிப்ரவரி 15ம் தேதி மதுரையில் தொடங்கினார்.
8 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு பிப்ரவரி 22ம் தேதி திருச்செந்தூரை அடைந்தார். கலைஞரின் இந்த நடைபயணம் ‘நீதி கேட்டு நெடும்பயணம்’ என்று சொல்லப்பட்டது.
கலைஞர் ஓய்வின்றி நடந்ததால் அவருடைய கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டபோதும், பொருட்படுத்தாமல் கட்டு போட்டுக் கொண்டு நடந்தார். 22ம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவரால் எழுந்து நிற்க முடியாததால் இருக்கையில் அமர்ந்தவாறே பேசினார்.
இதற்காக தொண்டர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்ட அவர், பின்பு பேசத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், “திருச்செந்தூரில் ஆண்டுதோறும் ‘சூரனை சுப்பிரமணியன் வதம் செய்வார். ஆனால், தற்போது சுப்பிரமணியனை சூரன்கள் வதம் செய்துள்ளனர்’ என்று சாடினார்.
இந்த நடைபயணம் கலைஞரின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாக அமைந்ததுடன், ஆளும் கட்சிக்கும், முதல்வர் எம்ஜிஆருக்கும் பெரும் நெருக்கடி ஏற்படக் காரணமாக அமைந்தது.
கலைஞர் திருச்செந்தூர் நடைப்பயணம் சென்றுவந்த பிறகு, இந்தப் பிரச்சினை குறித்து தமிழக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர், ‘கலைஞர் திருச்செந்தூர் போனார். முருகனே, அவரைப் பார்க்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார். இப்போது முருகன் சிலை அங்கில்லை’ என்றார்.
அதற்கு கலைஞர், ‘திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் களவாடப்பட்ட விஷயம் இப்போதுதான் தெரிகிறது’ என்றார் நகைச்சுவையாய்.
(அடுத்த பாகத்தில் வைகோவின் வீரநடை)
ஜெ.பிரகாஷ்
சிறப்புக் கட்டுரை: நவீன சென்னையை வடிவமைத்த கலைஞர்!