மத்திய அரசின் 24 அமைச்சகங்களுக்கு கீழ் செயல்படும் இணை செயலாளர், இயக்குனர், துணை செயலாளர் உள்ளிட்ட 45 உயர் பதவிகளுக்கு லேட்டரல் ரெக்ரூட்மெண்ட் எனப்படும் நேரடி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு என்டிஏ அரசின் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.
இதேபோல இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் நேரடி நியமனம் என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தநிலையில், நேரடி நியமன உத்தரவை யுபிஎஸ்சி திரும்ப பெற்றுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான், இந்தியா கூட்டணி கட்சிகள் வரவேற்பு அளித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி
எந்த விலை கொடுத்தும் அரசியல் அமைப்பு சட்டத்தையும் இட ஒதுக்கீட்டையும் நாங்கள் பாதுகாப்போம். பாஜகவின் ‘லேட்டரல் என்ட்ரி’ போன்ற சதிகளை எப்பாடுபட்டாவது முறியடிப்போம்.
நான் மீண்டும் சொல்கிறேன். 50 சதவிகித இடஒதுக்கீடு உச்சவரம்பை உடைத்து, சாதிவாரிக்கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக நீதியை நிலைநாட்டுவோம்.
திமுக தலைவர் ஸ்டாலின்
இந்தியா கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு பணிந்து மத்திய அரசு நேரடி நியமன உத்தரவை திரும்ப பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.
ஆனால், மத்திய அரசு இட ஒதுக்கீட்டை குறைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது. இதனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 50 சதவிகிதம் என்பதை அதிகரிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுகதாயங்களை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான்
எங்களின் கோரிக்கையை ஏற்று லேட்டரல் எண்ட்ரி முறையை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த அரசு ஒரு முன்னுதாரணமாக செயல்படுகிறது. வரும்காலங்களிலும் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் என்று நம்புகிறோம்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடும் எதிர்ப்பு: யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து!
துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ : ரிலீஸ் தேதியில் மாற்றம்!