ராஜன் குறை A reactionary nationalism that demands a single identity
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி குடியரசுகள் இரண்டு இந்தியாவும், அமெரிக்காவும். அடுத்த ஆண்டு இந்தியா மக்களாட்சி குடியரசாகி எழுபத்தைந்து ஆண்டுகளும், அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்கா மக்களாட்சி குடியரசாகி இருநூற்றைம்பது ஆண்டுகளும் ஆகப் போகின்றன. இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடி என்றும், அமெரிக்காவின் மக்கள் தொகை 34 கோடி என்றும் வலைத்தளம் ஒன்று கூறுகிறது. இரண்டும் சேர்த்தால் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி வருகிறது என்பதால் இந்த இரு நாடுகளும் மக்களாட்சி குடியரசாக எப்படி செயல்படுகின்றன என்பது உலக அளவில் முக்கியமானது எனலாம்.
இரண்டு குடியரசுகளுமே சந்திக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால் இனம் மற்றும் மத அடையாளவாதத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு தேசிய சக்திகள் தலையெடுத்திருப்பதுதான். முற்போக்கு தேசியம் என்பது என்னவென்றால் தேசத்தின் பொதுநலனுக்காக அனைத்து அடையாளங்களும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் எனலாம். உண்மையில் பிற அடையாளங்களை கடந்த தேசிய பொது நல சிந்தனையை வலியுறுத்தாவிட்டால் தேசியம் என்ற சிந்தனைக்கே பொருளில்லை.
ஆனால் மக்களாட்சி நடைமுறையில் பெரும்பான்மைவாதம் என்பதை வசதியாகக் காணும் பிற்போக்கு சக்திகள் மதவாத, இனவாத அடையாளங்களை முன்னெடுப்பதை பாசிச அரசியலாகக் கைக்கொள்கின்றன. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூக அடையாளங்கள் தங்கள் அரசியலை முன்னெடுப்பது முற்போக்கானது என்றால், ஆதிக்க சமூக அடையாளங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அரசியலை முன்னெடுப்பது பிற்போக்கானது என்றுதான் கூற முடியும்.
இந்தியாவில் இந்து அடையாளத்தையும், ஜாதீய படிநிலை சிந்தனையையும் உள்ளடக்கமாகக் கொண்ட இந்துத்துவம் பாரதீய ஜனதாவால் முன்னெடுக்கப்படுகிறது. பார்ப்பன சமூகத்தில் பிற்போக்கு மனோபாவம் கொண்டவர்களின் தீவிர ஆதரவு அதற்கு இருப்பதைக் காண முடிகிறது. அதன் முக்கிய வெளிப்பாட்டினை அரசியலமைப்பு சட்டத்திற்கு பொருந்தாத வகையில் ஆதிக்க ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் பத்து சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியதில் காணலாம்.
அமெரிக்காவின் மிகப்பெரிய பிரச்சினை இனவாதம், நிறவெறி மற்றும் கிருஸ்துவ மத அடிப்படைவாதம். இனவாதம் என்பது வெள்ளை இனத்தவரை மேம்பட்டவர்களாக, அமெரிக்காவின் உண்மையான குடிநபர்களாக கருதிக்கொள்வது. இனவெறி கருப்பினத்தவருக்கும், பிற வெள்ளையரல்லாத வர்ணத்தவருக்கும் எதிரான வன்மம், வெறுப்பரசியல். கிருஸ்துவ அடிப்படைவாதம் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும், பெண்ணிய சிந்தனைக்கும், மாற்றுப்பாலினத்தவருக்கும் எதிரான போக்கு; இது பிற மதத்தவர்களையும் வேறு படுத்திப்பார்க்கும் சாத்தியங்களும் உள்ளன. குறிப்பாக பெண்களின் கருக்கலைப்பிற்கான உரிமையை கிருஸ்துவ மத அடிப்படைவாதிகள் கடுமையாக எதிர்ப்பார்கள்.
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பிற்போக்கு தேசியங்களின் முகமாக இருக்கும் அமெரிக்க குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பும், பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் கொண்டாடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது நினைவிருக்கலாம். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் 2019-ஆம் ஆண்டு நிகழ்த்திய “ஹொடி மோடி” என்ற நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டார். மோடி அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரம் என்று நினைக்காமல் “ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்” என்று நடக்கவிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு டிரம்ப் இந்தியாவிற்கு வந்தபோது குஜராத்தில் “நமஸ்தே டிரம்ப்” என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை மோடி நடத்தினார். ஆனால் அந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.
பொதுவாக யார் இந்திய பிரதமராக இருந்தாலும், அமெரிக்க அதிபராக இருந்தாலும் அவர்கள் ஒருவர் நாட்டிற்கு மற்றவர் வருகை தருவதும், அப்படி வரும்போது வரவேற்பு அளிப்பதும் இயல்புதான். ஆனால் டிரம்ப், மோடி நிகழ்ச்சிகள் அரசு சார்பற்ற தனியார்களால் நடத்தப்படுவதாகக் கூறி, அவர்களது தனிப்பட்ட நட்பை வலியுறுத்துவதாக அமைந்தது அவர்களுடைய பொது அம்சமான பிற்போக்கு தேசியவாத கருத்தியலை பிரதிபலிப்பதாகவே அமைந்தது எனலாம்.
இந்த பின்னணியில்தான் கடந்த வாரம் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து பாஜக எழுப்பிய கேள்விகளையும், கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து டிரம்ப் எழுப்பிய கேள்விகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
பிறப்பும் தேசமும்
தேசம் என்பதை ஆங்கிலத்தில் நேஷன் என்கிறோம். நேஷன் என்ற வார்த்தையின் மூலச்சொல் இலத்தீனில் பிறப்பை குறிப்பதாகும். ஒரு தேசத்தின் எல்லைக்குள் பிறந்தவர்கள் அந்த தேசத்தின் குடிநபர் ஆகலாம் என்ற விதியை அமெரிக்கா உட்பட பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தால் அதன் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிநபராக இருந்தால், மற்றொருவர் அனுமதியற்று இந்தியாவில் குடியேறியவர் இல்லையென்றால் அந்த குழந்தை குடிநபர் ஆகலாம். பொதுவாக குடியுரிமை என்பது வம்சாவழியாக வரலாம்; அந்த நாட்டின் எல்லைக்குள் பிறப்பதால் வரலாம்; அல்லது அந்த நாட்டில் குறிப்பிட்ட காலம் தொடர்ந்து வசிப்பதாலும் வரலாம். வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதிகளை பின்பற்றுகின்றன.
இப்படியெல்லாம் சட்டப்படி குடிநபராக இருந்தாலும், ஒருவர் வேறொரு நாட்டில் பிறந்தவராக இருந்தாலோ, வேறொரு நாட்டின் வம்சாவழியினராக இருந்தாலோ அந்நியராக கருதப்படுவது நடக்கத்தான் செய்கிறது. உதாரணமாக சோனியா காந்தி, இத்தாலியில் பிறந்தவரானாலும், இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் மகனான ராஜீவ் காந்தியை மணந்துகொண்டு இந்தியாவில் குடியேறியவர். திருமணம் மூலமாகவும், தொடர்ந்து வசித்ததாலும் இந்திய குடியுரிமை பெற்றவர்.
பின்னாளில் அவர் கணவர் ராஜீவ் காந்தியே இந்திய பிரதமராக இருந்தவர். இத்தனை இருந்தும் 2004 தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை நாடாளுமன்ற இடங்களை வென்றபோது அவர் பிரதமராவதை பாரதீய ஜனதா கட்சியினர் விமர்சித்தனர். அவரும் மன்மோகன் சிங்கை பிரதமராக்கிவிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவராகவே தொடர்ந்தார். இந்த நிகழ்விற்குப் பின் அமெரிக்காவிற்கு கல்வி பயிலச் சென்ற மாணவி ஒருவரை அங்கிருந்த விமான நிலையத்தில் பரிசோதித்த குடியேற்ற அதிகாரி, நீங்கள் மட்டும் இங்கே உதவித் தொகை பெற்று படிக்க வருகிறீர்கள், ஆனால் உங்கள் நாட்டில் சோனியா காந்தியை பிரதமராக அங்கீகரிக்க மாட்டீர்களா என்று கேட்டார்.
ஆனால் இந்திய வம்சாவழியினரான ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானதையோ, இந்திய வம்சாவழியினரான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் ஆனதையோ பாரதீய ஜனதா கட்சியினர் பாராட்டத் தவறவில்லை. அதாவது மற்ற தேசங்களில் இந்திய வம்சாவழியினர் ஆட்சி செய்தால் பெருமை; இந்தியாவில் பிற தேசத்து வம்சாவழியினர் ஆட்சி செய்தால் அது ஏற்கத்தக்கதல்ல என்ற மனோபாவமே பிற்போக்கு தேசியத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. அதனுள் இனவாத மனோபாவம் தலைவிரித்து ஆடுகிறது. தேசம் என்பது அதில் வசிக்கும் குடிநபர்களின் கூட்டு நலனை முன்னெடுப்பது என்பதையும், அந்த குடிநபர்களின் பிற அடையாளங்கள் முக்கியமானதல்ல என்பதையும் ஏற்க மறுக்கிறது.
ஜாதியற்றவராக இருந்தால் என்ன பிரச்சினை?
ராகுல் காந்தி ஜாதீய சமத்துவம், சமநீதி ஆகியவற்றை தனது கொள்கையாக வரித்துக்கொண்டுள்ளார். பதினைந்து சதவீதமாக உள்ள ஆதிக்க ஜாதியினரே பெரும்பாலான அதிகாரமிக்க, செல்வாக்குமிக்க இந்திய அரசின் உயர்பதவிகளை வகிப்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். எண்பத்தைந்து சதவீதமாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் செல்வாக்குமிக்க அதிகாரிகளாக பதவி வகிப்பதில்லை. இதற்குக் காரணம் பன்னெடுங்காலமாக நிலவிவரும் வர்ண-ஜாதி படிநிலை அமைப்புதான் என்பது தெளிவானது. இந்த நிலையை சரிசெய்ய ஜாதிவாரியாக சமூக பொருளாதார நிலையை அறியும்படி மக்கள் தொகை கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சி அனைத்து வகுப்பினருக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஒப்புக்கு இடம் கொடுப்பதன் மூலமாக சமூக ஏற்றத்தாழ்வை மூடி மறைக்கப் பார்க்கிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்களை இணைத்துக் கொள்வதன் மூலம் வாக்கு வங்கி அரசியலை கட்டமைத்துவிட்டால் போதும் என செயல்படுகிறது. கல்வி, வேலை வாய்ப்புகளிலும், அதிகாரமிக்க பதவிகளிலும் அனைத்து வகுப்பினரும் இடம்பெற என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து அது அக்கறைப் படுவதில்லை.
இந்த பின்னணியில்தான் ராகுல் காந்தி, பட்ஜெட் தயாரித்த அதிகாரிகளுடன் நிதியமைச்சர் அல்வா கிண்டும் காட்சியை சுட்டிக் காட்டி அதில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை பேர் இடம்பெற்றுளனர் என்ற கேள்வியை எழுப்பினார். இந்த கேள்வி இந்திய மக்களாட்சியை மேலும் முற்போக்கானதாக மாற்ற அனைத்து சமூகத்தினரையும் அதிகாரத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் கேட்கப்பட்ட கேள்வி என்பது வெளிப்படையானது.
இதற்கு பதிலாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனுராக் தாகூர் தன்னுடைய ஜாதி என்னவென்றே தெரியாதவர்கள் ஜாதி குறித்து பேசுகிறார்கள் என்று கூறினார். இந்தக் கூற்று பலராலும் வன்மையாக கண்டிக்கப்பட்டு வருகிறது.
ராகுல் காந்திக்கு ஜாதி என்னவென்றே தெரியாது என்று கூறுவதன் பின்னால் மிக ஆழமான ஜாதீய மனோபாவம், ஜாதித் திமிர் செயல்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. காலம் காலமாக ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்களை “ஜாதி கெட்டவர்கள்” என்று ஒதுக்கி வைப்பதும், அவர்கள் குழந்தைகளை ஜாதியற்றவர்கள் என்று ஒதுக்குவதும் ஜாதீய சமூகத்தில் நடைபெறும் பழக்கங்கள். அதன் உண்மையான பொருள் அத்தகைய திருமணங்கள் முறையானவை என்று சனாதனிகள் ஏற்காததால், அந்த திருமண பந்தத்தில் பிறந்த குழந்தைகள் முறை தவறிப் பிறந்தவர்கள் என்று சுட்டுவதாகும். அதனால்தான் அனுராக் தாகூர் கூற்றை அகிலேஷ் யாதவ் உடனடியாக வன்மையாக கண்டித்தார். ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பேசுபவர்கள் இழிவு படுத்தப்படுவது வழக்கம்தான் என்பதால் தான் இந்த இழிவை ஏற்பதாகக் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி காஷ்மீர் பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பார்சி வகுப்பைச் சேர்ந்த ஃபிரோஸ் காந்தியை மணந்தார். அவருடைய மகன், ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி, கிறிஸ்துவரான சோனியா காந்தியை மணந்தார். அதனால் ராகுலின் வம்சாவழி இரண்டு ஜாதி, மதம் கடந்த திருமணங்களை உள்ளடக்கியுள்ளது. ராகுல் காந்தி தன்னை இந்து என்றும், சிவபக்தன் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
முற்போக்கான தேசியத்தில் ஜாதி, மத அடையாளங்கள் பன்மையுற வேண்டும். தனி நபர்கள் சுதந்திரமாக தங்கள் விருப்பப்படி யாரையும் மணக்கவும். தாங்கள் விரும்பும் வழிபாடு, சடங்குகளை பின்பற்றவும் உரிமை இருக்க வேண்டும். ஜாதிக்குள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அகமணமுறை பிற்போக்குவாதம் மட்டுமல்ல, தேசத்தை என்றென்றும் வர்ண-ஜாதி அமைப்பில் வைத்திருக்கச் செய்யும் சதியாகும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வளர்த்தெடுத்த தலைவர், சித்தாந்தவாதி கோல்வால்கர் வெளிப்படையாக வர்ண தர்மத்தை ஆதரித்தவர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதனால்தான் அனுராக் தாகூர் முறைதவறி ராகுல் காந்தியை இழிவுபடுத்திக் கூறியதை நாடாளுமன்ற குறிப்பிலிருந்து நீக்கியபிறகும் பிரதமர் மோடி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அது ஜாதீய மனோபாவத்தைக் கொண்டாடும் செயல் என்று தெரிந்தேதான் செய்துள்ளார்.
கமலா ஹாரிஸ் கருப்பினத்தவரா, ஆசியரா என்ற அபத்தமான ஆராய்ச்சி
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பிற்போக்காளர்களின் பெரும் ஆதரவைப் பெற்றவர். அவர் 2020-ஆம் ஆண்டு ஜோ பைடனிடம் தோற்றதை ஏற்றுக்கொள்ள மறுத்து நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்குமாறு தன் ஆதரவாளர்களை தூண்டிவிட்டவர். அமெரிக்க மக்களாட்சிக்கு அழியாத களங்கத்தை உருவாக்கியவர். பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதற்கு வழக்குகளை சந்திப்பவர். பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்திப் பேசியவர். பொய் சொன்னதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்.
அமெரிக்க குடியரசுக் கட்சி தன் பெருமுதலீட்டிய ஆதரவை செயல்படுத்த எப்படியாவது ஆட்சியை கைப்பற்றினால் போதும் என டிரம்ப்பை மீண்டும் இந்த ஆண்டு வேட்பாளராக அறிவித்தது. டெமாக்ரிடிக் கட்சியின் சார்பாக போட்டியிடும் அதிபர் பைடனுக்கு வயது மூப்பினால் தடுமாற்றம் அதிகமாகியதால், டிரம்ப் மீண்டும் வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிப்புகள் கூறத் துவங்கின. இருவருக்கும் நடந்த விவாதத்தில் மறதியினால் பல தவறுகளை ஜோ பைடன் செய்தது அவர் ஆதரவாளர்களையே அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த நிலையில்தான் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, தன் துணை அதிபரான கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். கட்சியும் அதனை ஏற்றுக்கொண்டு இப்போது கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தல் வேட்பாளராகிவிட்டார். டிரம்ப்பை விட வயதில் மிக இளையவரான அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவிலிருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய கருப்பினத்தவர். அவருடைய தாய் சென்னையிலிருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய இந்தியர். எனவே கமலா ஹாரிஸிற்கு கறுப்பின அடையாளம், இந்திய வம்சாவழி அடையாளம் இரண்டுமே இயல்பாகவே அமைந்ததுதான். இதில் ஏதோ ஒரு அடையாளத்தைத்தான் அவர் ஏற்கவேண்டுமென்பது இல்லை. ஆனால் அவர் அமெரிக்காவில் வளர்ந்த சூழலில், கல்வி கற்ற சூழலில் அவர் கருப்பினத்தவராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்; பிறரும் அவரை அவ்வாறே ஏற்றுள்ளனர்.
டிரம்ப்பின் பிரச்சினை என்னவென்றால் கமலா ஹாரிசிற்கு கருப்பினத்தவர் ஆதரவு முழுமையாக சென்றுவிட்டால் அவரை வெல்வது கடினம் என்பதுதான். அதனால் அவர் கருப்பினத்தவராக தன்னை கூறிக்கொள்ளவில்லை, ஆசிய வம்சாவழியாகவே கூறிக்கொண்டார் என்று ஒரு பொய் பிரசாரத்தை துவங்கியுள்ளார். இது மிக பிற்போக்குத்தனமான வாக்கு வங்கி அரசியல் என்பது தெளிவு. அதற்காக இவ்வளவு தரம் தாழ்ந்து டிரம்ப் பொய் சொல்வது அமெரிக்க மக்களாட்சி எவ்வளவு பெரிய நெருக்கடியை சந்திக்கிறது என்பதையே காட்டுகிறது.
இருபத்தோராம் நூற்றாண்டிலும் கூட ஜாதி, இனம், மதம் கடந்த திருமணங்களையும். அந்த திருமணங்களில் பிறந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளம் கொண்டவர்களாக இருப்பதையும் ஏற்க மறுக்கும் பிற்போக்குவாத தேசியம் மக்களாட்சி விழுமியங்களை பாழாக்காமல் தடுப்பது முற்போக்காளர்களின் கடமை.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிதிப்பகிர்வு பிரச்சினைகள்: கூட்டாட்சிக் குடியரசு என்பது கூட்டுக்குடும்பமா? குடியிருப்பு வளாகமா?
அரசியலமைப்பு சட்டத்தைக் கொல்வது என்றால் என்ன?
கலைஞர் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: ஸ்டாலின் கடிதம்!
சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி எஸ்.பி!
A reactionary nationalism that demands a single identity