மதுரையில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விக்டோரியா எட்வர்டு மன்ற நூலகம், தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாகக் கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப்டம்பர் 9) ஆய்வு மேற்கொண்டார்.
விக்டோரியா எட்வர்டு மன்றம் பூட்டி இருந்த காரணத்தினால் சீமான் உள்ளே செல்ல இயலவில்லை. இதைத் தொடர்ந்து மதுரையில் இன்று (செப்டம்பர் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். அவர் என்னவாக பாடுபடுகிறார்? முதலமைச்சர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள்தான் சொல்ல வேண்டும்.
80 சதவீத பிரச்சனைகளை, தீர்த்துவைத்ததாக முதலமைச்சர் தெரிவித்துவரும் நிலையில், 8 பிரச்சனைகளையாவது அவர் தீர்த்தாரா என்பதுதான் நம்முடைய கேள்வி.
புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு, ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக கொடுக்கும் கல்வியை தரமாக கொடுக்க வேண்டும்.
மாணவிகளை கையேந்த வைப்பது புதுமை அல்ல. பெண்களுக்கு கல்வியை கொடுத்து வளமாக்க வேண்டும்.
பெண்கள் யாரையும் சார்ந்து இல்லாமல் தன்காலில் நின்று உழைக்கும், வாழும் நிலையை உருவாக்குவதே புதுமை பெண் திட்டம். 1000 ரூபாயை வைத்து ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா? அல்லது 1000 ரூபாயை வைத்து எந்தக் கல்லூரியிலாவது சேரத்தான் முடியுமா?,
ஷாருக்கான் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகர் நடிகைகளைதான் மாடல் என்பார்கள். அதுபோல, இங்கு திராவிட மாடல் எனச் சொல்லிக்கொண்டு பல ஆயிரம் கோடியில் விளம்பரம் மட்டும்தான் நடக்கிறது. ஆட்சி நடக்கவில்லை.
இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டுவராத ராகுல் காந்தி 5 மாதத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு மாற்றம் கொண்டுவந்து விடுவாரா? என்ன மாற்றம் வரப்போகிறது.
காலையும், மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம். மோடியை எதிர்க்க ஆள் வேண்டும். அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை” என்றார்.
ஜெ.பிரகாஷ்
‘நீங்களே ஒரு டெம்ப்ரவரி தான்’: எடப்பாடியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்