“ராகுல் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்”: செல்வ பெருந்தகை

அரசியல்

2 ஆண்டுகள் அல்ல 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும் இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் இன்று இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராகுல் காந்தி வேண்டுதலின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு வெளியே கருப்பு ரிப்பன் கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியபோது, “ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் உண்டு. மக்களுடைய குரலாக அவர் தனது கருத்தை பேசியிருக்கிறார்.

சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்ற குடும்பத்தை அவதூறு வழக்கு தொடுத்து சிறை தண்டனை விதித்திருக்கிறார்கள். 2 ஆண்டுகள் அல்ல 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாலும் இந்த நாட்டு மக்களுக்காக ராகுல் காந்தி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பொய்யும் புரட்டும் ஒரு நாள் விடிவுக்கு வரும். உண்மைக்கு புறம்பான இந்த வழக்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நாங்கள் துடைத்தெறிவோம். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

அரவக்குறிச்சி தேர்தலில் 30 கோடி செலவா? செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதில்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மீண்டும் தாக்கல் செய்த முதல்வர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *