கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி புலி புகைப்படம் ஒன்றை பரிசளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் கமல்ஹாசனும் , காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமீபத்தில் அரசியல், இந்தியா, சமூகம் மற்றும் அவர்களது தொழில் பயணங்கள் ஆகியவற்றைக் குறித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
இதில், ராகுல் கமலுக்குக் கொடுத்த பரிசுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் யாத்திரையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
இதற்காகக் கமல் டெல்லி சென்றிருக்கும் போது இருவரும் உரையாடிய வீடியோ ராகுல் காந்தியின் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் இருவரும் பேசியதாவது….
ராகுல் : உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
கமல் : “அப்படிச் சொல்லாதீர்கள். ஒரு இந்தியனாக நாட்டில் நடப்பவற்றைப் பார்த்து எனக்குள் எழும் கோபத்தை வெளிப்படுத்துவது எனது கடமை என தோன்றியது.
உங்கள் தாத்தாவின் பெயரில் என்னிடம் ஒரு புத்தகம் உள்ளது. இங்கே வருவதற்கு முன்னதாக அதை நான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் கடந்து வந்த இந்த 2,800 கிமீ ஒன்றுமே இல்லை என தோன்றியது. வேர்வை, கண்ணீர், ரத்தம் நிறைந்த பாதைகளை நீங்கள் கடந்திருக்கிறீர்கள்.
வரலாறு படைக்கப்படுவதை நீங்கள் உள்ளிருந்து கண்டிருக்கிறீர்கள். அதை நான் வெளியில் இருந்து பார்க்கிறேன்.
எனவே நான் உங்களுடன் சேர்ந்து நடக்கவில்லை எனில் அது நியாயமானதாக இருக்காது”.
ராகுல் காந்தி : எனது மருமகன் (பிரியங்கா காந்தி ராபர்ட் வதோராவின் மகன் ரைஹான் வதோரா) ஒரு புகைப்படக் கலைஞர். அவரிடம் என் நண்பர் கமலுக்குப் பரிசளிக்க விரும்புகிறேன்.
நீங்கள் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பரிசாகக் கொடுங்கள் என்று கேட்டேன். அப்போது அவர் என்ன கொடுத்தார் என உங்களால் யூகிக்க முடியுமா? எந்த படத்தைக் கொடுத்திருப்பார் என நினைக்கிறீர்கள்?
கமல் – எனக்குத் தெரியவில்லை.
ராகுல் – வாங்க பார்க்கலாம்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து கமலை அழைத்துச் செல்லும் ராகுல் காந்தி அங்கு வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த பரிசை காட்டி, கமல் யாரென்பதை இந்த புகைப்படம் பிரதிபலிக்கும் என்று கூறுகிறார்.
பின்னர் வெள்ளை துணியைத் திறந்து காண்பித்ததும், புலி ஒன்று தண்ணீர் குடிப்பது போன்று அந்த புகைப்படம் உள்ளது.
அப்போது ராகுல் காந்தி, “நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை இது குறிக்கிறது.
நீங்கள் சிறந்த இந்தியர், சிறந்த தமிழர். உங்கள் அணுகுமுறை மற்றும் வாழ்க்கையின் அணுகுமுறையைப் பற்றி இந்த புகைப்படம் கூறுகிறது” என்றார்.
புகைப்படத்தைப் பார்த்து கமல், இது உங்கள் மருமகன் எடுத்ததா? அருமையாக இருக்கிறது என ராகுலிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினர்.
பிரியா
நிர்வாணமாக காரில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்: குற்றவாளிகளை தூக்கிலிட கோரிக்கை!
டிஜிட்டல் திண்ணை: இளைஞரணியில் உதயாவின் புதிய ட்விஸ்ட்- உதறலில் மாசெக்கள்!