டிஜிட்டல் திண்ணை: லீகல் மிராகிள்… ராகுலுக்கு விதிக்கப்பட்ட  தண்டனையும், தகுதி நீக்கமும்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் எல்லா வடிவங்களிலும் ராகுல் காந்தி தகுதி நீக்கமே டிரண்டிங் ஆகிக் கொண்டிருந்தது.

வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“மார்ச் 23-ஆம் தேதி அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதன் அடிப்படையில் ராகுல் காந்தி வகித்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (எம்பி) பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

இந்த தண்டனை விதிக்கப்பட்ட வழக்கிலே நடந்த பரபரப்பான திருப்பங்கள்தான் இப்போது விவாதிக்கப்படுகின்றன.

முதலாவதாக கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பற்றி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ற கேள்வியை ராகுல் தரப்பு எடுத்து வைத்தது. ஆனால் அதை சூரத் நீதிமன்றம் ஏற்கவில்லை.

மேலும் சூரத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஏ.என். டேவ் முன்  ராகுல் காந்தி 24 ஜூன் 2021 அன்று நேரில் ஆஜரானார்.  அவருடைய வாக்குமூலம் அப்போது பதிவு செய்யப்பட்டது.  மார்ச் 2022 இல்,  வழக்குத் தொடுத்த புருனேஷ் மோடி  மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, ராகுல் காந்தி இரண்டாவது முறையாக ஆஜராக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.  

ஆனால் மாஜிஸ்திரேட் டேவ் அவரது கோரிக்கையை நிராகரித்து, வழக்கின் விசாரணையை உடனடியாக தொடங்கி வேகமாக நடத்த  உத்தரவிட்டார். இங்கேதான் ஒரு வினோதம் நடந்தது.

ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடுத்த புருனேஷ் மோடி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை எதிர்கொள்ளும் ராகுல் இடைக்காலத் தடை கேட்கவில்லை, மாறாக வழக்கைத் தொடுத்த புருனேஷ் மோடிதான் இடைக் காலத் தடை கேட்டார். குஜராத் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை கொடுத்தது.

இது சட்டத் துறையையே குழப்பியது. குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல – புகார்தாரர் எப்படி தடை கோரினார் என்பதை உயர்மட்ட வழக்கறிஞர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் சிங்வி மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு அளித்த பேட்டியில் இது வினோதமானது என்று குறிப்பிட்டார். 

இதற்கிடையே சூரத் நீதிமன்றத்தில் ராகுல் மீதான அவதூறு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தேவ் மாற்றப்பட்டு, ஹரிஷ் வர்மா நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இப்படி வழக்கு நிலவரம் இருக்க கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் அதானி விவகாரம் நாடு முழுவதும் வெடித்தது. அப்போது ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதானியும் பிரதமர் மோடியும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எடுத்துக் காட்டி சில கேள்விகளை காட்டமாக முன் வைக்கிறார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ராகுலின் இந்த மோடி-அதானி போட்டோ மற்றும் கேள்விகளுக்குப் பிறகு சில நாட்களில்  அவதூறு வழக்குக்கு இடைக் காலத் தடை பெற்றிருந்த புருனேஷ் மோடி குஜராத் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று இடைக் காலத் தடையை நீக்குமாறு கோரினார்.  அதன் பின் தடை நீக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மார்ச் 23 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மனுதாரர் புருனேஷ் மோடி வாங்கிய ஸ்டே, அவரே பின் அதை திரும்பப் பெற்றுக் கொண்டது உள்ளிட்ட சட்ட வினோதங்களுக்குப் பிறகு மார்ச் 23 ஆம் தேதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை எல்லாம் மேல்முறையீட்டில் எடுத்துரைப்போம் என்கிறார்கள் காங்கிரஸ் காரர்கள். மேலும் அவதூறு வழக்குகளில் பெரும்பாலும் முழுமையான தண்டனையான 2 வருட சிறை தண்டனை என்பது, ‘ஹாபிச்சுவல் அஃபெண்டர்’ எனப்படும் தொடர் அவதூறு பரப்பும் வெறுப்புப் பேச்சாளர்களுக்குதான் வழங்கப்படும். ஆனால் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச தண்டனைக்கு பதிலாக முழுமையான தண்டனையை வழங்கியிருக்கிறது. ராகுல், ‘ஹாபிச்சுவல் அஃபெண்டர்’ கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் முழுமையான 2 வருட தண்டனை வழங்கப்பட்டதால் தகுதி நீக்கத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இதையும் நாங்கள் அப்பீலில் சுட்டிக் காட்டுவோம் என்கிறார்கள் காங்கிரசார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அடிப்படையை வைத்து இதுவரை கருத்துவேறுபாடுகள் கொண்ட எதிர்க்கட்சிகள் கூட இனி ஒரே தளத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறது என்பதுதான் தற்போதைய அரசியல் நிலவரம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இன்று (மார்ச் 25) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார். அதில் அடுத்த புயல்களை அவர் வீச வைக்கக் கூடும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்:” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கேன்ஸ் பட விழாவில் தமிழ் குறும்படங்கள்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
1
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *