ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (ஏப்ரல் 15) தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்தற்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 26-ஆம் தேதி இந்தியா முழுவதும் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறார்.
செல்வம்