ராகுல் மேல்முறையீடு: மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Published On:

| By Selvam

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு குஜராத் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக சட்டமன்ற உறுப்பினர் புருனேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மக்களவை செயலகம் அவரை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தது. இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹேமந்த், பிரச்சக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல் 29) விசாரணைக்கு வந்தது.

ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு தீவிரமானது அல்ல. அவர் பேசியதாக கூறப்படும் அவதூறு பேச்சுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் புருனேஷ் மோடி சமர்ப்பிக்கவில்லை. கிரிமினல் அவதூறு வழக்கில் 3 அல்லது 6 மாதங்கள் மட்டுமே தண்டனை வழங்கப்படும். ஆனால் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ராகுல் காந்தியின் தண்டனை காலத்தை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

அரசு வழக்கறிஞர் மிதேஷ் அமீன், “அவதூறு வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது. ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பதில் எந்த மதிப்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

டாஸ்மாக் ஏடிஎம்: எடப்பாடி கண்டனம்!

உயர்கல்விக்கு வழிகாட்ட புதிய திட்டம் அறிவிப்பு!

வரலாற்றில் முதன்முறை: உச்சநீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி! நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel