மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (ஜூன் 29) சந்திக்க சென்ற ராகுல் காந்தியின் கான்வாய் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே3ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது.
இரு சமூகங்களிடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கலவர பூமியாக காட்சியளிக்கும் மணிப்பூர் மாநிலத்துக்கு இரண்டு நாட்கள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்றடைந்தார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்த அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் சுராசந்த்பூர் சென்ற ராகுல்காந்தியின் கான்வாய் இம்பாலில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள பிஷ்னுபூரில் அம்மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ராகுல் காந்தியின் இந்த பயணம், செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ”பிஷ்ணுபூர் அருகே ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அனுமதிக்கும் நிலையில் சூழ்நிலை இல்லை என போலீசார் கூறுகின்றனர். ராகுல் காந்தியை நோக்கி மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கைகளை அசைக்கிறார்கள். எங்களை ஏன் தடுத்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
”ராகுல் காந்தியை முன்னோக்கி செல்ல அனுமதிக்க முடியாது. அவரது பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்றும், அந்த வழித்தடத்தில் வன்முறை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கான்வாய் நிறுத்தப்பட்டது என்றும் பிஷ்ணுபூர் எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
எனினும் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், ராகுல்காந்தியின் முயற்சியை தடுக்கும் விதமாக தற்போது அவரது கான்வாய் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனையடுத்து இம்பால் விமான நிலையத்திற்கு திரும்பிய ராகுல் காந்தி, ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா