தமிழர்கள் அன்பு செலுத்தும் விதமே வித்தியாசமாக இருக்கும் என்று கமல்ஹாசனிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது நடைபயணத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நடிகைகள் ரியா சென், ஸ்வரா பாஸ்கர், விசிக தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி டெல்லியில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பேசுகையில், “ராகுல் என்னுடைய சகோதரர். தேசத்தின் ஒற்றுமைக்காக நான் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன். நான் காந்தியின் கொள்ளுப்பேரன். நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து இந்தியாவை மீட்டெடுப்போம்.” என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில் கமல்ஹாசனுடன் ராகுல் காந்தி உரையாடிய வீடியோ காட்சிகளின் முன்னோட்டம் நேற்று வெளியானது
அந்த வீடியோவில் ராகுல் காந்தி, “வணக்கம் கமல், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. வெறுப்பு என்பது கண்மூடித்தனமான ஒரு தவறான புரிதல். சீனர்களை எதிர்கொள்ள இந்தியாவால் மட்டும் தான் முடியும். மேற்கத்திய நாடுகளால் கூட முடியாது. தமிழர்கள் அன்பு செலுத்தும் விதமே வித்தியாசமாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.
அவருக்கு பதிலளித்த கமல்ஹாசன், “விவசாயத்தை தொடர்ந்து புறக்கணிப்பது தமிழர்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அவர்கள் டெல்லிக்கு வந்து குரல் கொடுத்தார்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.” என்று பேசியிருந்தார்.
இருவரின் முழு உரையாடல் இன்று காலை 10 மணிக்கு ராகுல் காந்தி யூடியூப் சேனலில் வெளியாகிறது.
செல்வம்