2024 – 2025-ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் மீதான உரையில் இன்று (ஜூலை 29) பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் அச்சம் நிறைந்த ஒரு சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் பரவியுள்ளது.
சிறு, குறு வணிக நிறுவனங்களை மிக கடுமையாக பாதித்திருக்கும் வரிப்பயங்கரவாதத்தின் பிரச்சனையை பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.
வினாத்தாள் கசிவு என்பது இளைஞர்களைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அக்னிவீர் திட்டத்தின் சக்கரவியூகத்தில் இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை.
மக்கள் தொகையில் 73 சதவிகிதம் உள்ள தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
அம்பானி, அதானி ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்பதால் ஏ1, ஏ2 என்று இங்கு குறிப்பிடுகிறேன்.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மற்றும் வணிகத்தை அவர்கள் இரண்டு பேர் மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு அமைப்புகள், துறைமுகங்கள் ஆகியவற்றை வைத்திருக்கின்றனர். தற்போது ரயில்வே துறையிலும் களமிறங்கியுள்ளனர். நாட்டின் பணத்தின் மீது அவர்கள் ஏகபோக சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
என்டிஏ அரசாங்கம் செய்யத்தவறிய வாக்குறுதிகளை நாங்கள் செய்வோம் என்று இந்த நாட்டின் விவசாயிகளுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம்.
இந்த பட்ஜெட்டுக்கு முன்பாக நடுத்தர வர்க்கத்தினர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் தற்போது, அவர்களின் முதுகிலும் நெஞ்சிலும் நீங்கள் குத்தியுள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடியின் தாமரை வியூகத்தில் நாடு சிக்கியிருக்கிறது: ராகுல் தாக்கு!
மொய்தாம்கள் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு !