காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தமிழகத்தில் மேற்கொண்ட நடைபயணத்தில் ஓய்வின்போது எம்.பி. ஜோதிமணி, காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கால் அமுக்கிவிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் பாரத் ஜோடோ யாத்ரா
எனும், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.
மொத்தம் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் நடைப்பயணத்தை நிறைவு செய்கிறார். அவருடன் காஷ்மீர் வரை 118 பேர் செல்கின்றனர்.
7வது நாளான இன்று (செப்டம்பர் 13) கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.
இந்த நிலையில், ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணம் செய்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் காங்கிரஸ் பிரமுகர்களாலேயே சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நடைப்பயணத்தின் இடையே களைப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கிடைத்த இடங்களில் உறங்கும் போட்டோக்கள் முன்பு வெளிவந்தன.
இந்த வகையில் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான திவ்யா மருந்தியா ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். ராகுல் பொதுமக்களுடன் அக்கறையுடன் பேசுவது, மாணவர்களுடன் சேர்ந்து நடப்பது, நடைப்பயணத்தின் போது காங்கிரஸ் தொண்டர்களின் கால்களில் ஏற்பட்ட காயம் என பலவேறு புகைப்படங்களையும் வீடியோவையும் அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்த வரிசையில் காங்கிரஸ் எம்பியும் தென்மாநிலங்களுக்கான நடைபயண பொறுப்பாளருமான ஜோதிமணி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ஓய்வெடுக்கும்போது அவருக்கு அக்கறையோடு கால் அமுக்கிவிடும் படத்தையும் பகிர்ந்து, ‘இதுதான் என் காங்கிரஸ். அக்கா தம்பிக்காற்றும் உதவி’ என்று தலைப்பிட்டுள்ளார். அந்த நிர்வாகி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மகேந்திரன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தை எம்.பி. ஜோதிமணியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இது சமூக தளங்களில் அதிக கவனிப்பைப் பெற்று வருகிறது.
ஜெ.பிரகாஷ்
ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து!