தமிழகம் மற்றும் கேரளாவில் நடைப்பயணத்தை முடித்த ராகுல் காந்தி, நாளை (செப்டம்பர் 30) முதல் கர்நாடகாவில் தொடங்க இருக்கிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரளா வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தை தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார்.
தமிழகத்தில் நான்கு நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கேரளாவில் செப்டம்பர் 11ம் தேதி முதல் நடைபயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து கேரளாவில் பல பகுதிகளில் 17 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இன்று காலை (செப்டம்பர் 29) அங்கு நிறைவு செய்து மலப்புரம் மாவட்டம் வழியாக இரு மாநில சோதனைச் சாவடி உள்ள கீழ்நாடுகாணி பகுதிக்கு வந்தார்.
அங்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோழிபாலம் அரசு கல்லூரிக்கு சென்றார்.

அங்கு, கட்சி நிர்வாகிகள், தேயிலை விவசாய தொழிலாளர்கள், தன்னார்வலர்களை சந்தித்தார். இதையடுத்து, மாலை 5:00 மணிக்கு கோழிபாலம் அரசு கல்லூரி நுழைவு வாயில் பகுதியிலிருந்து, கூடலூர் நோக்கி நடைப்பயணத்தை தொடங்கினார்.
நடைபயணத்தில், அவருடன் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் மெயின்ரோடு வழியாக கூடலூர் புதிய பஸ் நிலையத்திற்கு சென்ற அவர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கூடலூர் அழகாய் இருப்பதற்குக் காரணம், இங்கிருக்கும் மலைகளும் சூழ்நிலைகளுமே. இங்கு மூன்று மொழிகளும், மூன்று கலாசாரமும், மூன்று பண்பாடுகளும் கலந்துள்ளன.
இவ்விடம் மூன்று மொழிகளையும் மதிக்கப்படும் இடமாக இருக்கிறது. இங்கு வெவ்வேறு மதங்களும் வரவேற்கப்படுகின்றன; ஆதரிக்கப்படுகின்றன. இங்கிருக்கும் மக்களிடம் கோபத்தையோ, வெறுப்புத்தன்மையையோ காணமுடியவில்லை.

இந்த இடத்தில் யாரும் யாரையும் அவமதிப்பதில்லை. அதேநேரத்தில் இங்குள்ள சிலர், சில நிறுவனத்தினர் அமைதியை குலைக்கப் பார்க்கின்றனர். அவர்கள் மக்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்த நினைக்கின்றனர்.
பாஜக ஒரே மொழியையும் ஒரே கொள்கையையும் திணிக்கின்றது. ஆனால், காங்கிரஸை பொறுத்தவரை அனைத்தும் இணைந்துதான் இருக்க வேண்டும்” என்றார்.
இன்று இரவு, கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கேரவன் வேனிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை (செப்டம்பர் 30) காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட்டு காரில் கர்நாடகாவுக்குச் செல்கிறார். கர்நாடகாவில் நாளை முதல் நடைப்பயணத்தைத் தொடர இருக்கிறார், ராகுல்.
ஜெ.பிரகாஷ், செல்வம்
காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!
சிறப்புக் கட்டுரை: பொன்னியின் செல்வன்- கல்வெட்டுகளும் கல்கியின் கற்பனையும்!