ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் இரண்டாம் கட்டம் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் `காங்கிரஸ் சிந்தனை அமர்வு’ மாநாடு நடத்தப்பட்டது. சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, ப.சிதம்பரம் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் 2024 தேர்தலுக்கான புதிய வியூகங்கள் வகுப்பது, கட்சி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்டப் பல்வேறு சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியை வலுப்படுத்துவதற்காக மூன்று முக்கியக் குழுக்களை உருவாக்கி அதற்கானப் பணிகளையும் பட்டியலிட்டார். அதில் ஒன்றுதான் அகில இந்திய அளவிலான பாரத் ஜோடோ யாத்திரை.
கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்தப் பாதயாத்திரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 4,000 கிலோமீட்டர்களைக் கடந்து காஷ்மீரின் ஶ்ரீநகரில் 2023 ஜனவரி 30-ம் தேதி நிறைவடைந்தது.

பா.ஜ.க-வின் இடையூறுகள், இயற்கை இடர்கள், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களையும் தாண்டி சுமார் 136 நாள்களாக ராகுல்காந்தி இந்த யாத்திரையை மேற்கொண்டார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்தன.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் முதல் குஜராத்தின் போர்பந்தர் வரை தமது 2-வது பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் 2-வது பாரத் ஜோடோ யாத்திரையானது இந்தியாவின் கிழக்கு எல்லையில் தொடங்கி மேற்கு எல்லை வரை நடைபெறுகிறது.
இந்த யாத்திரை எப்போது தொடங்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மைக் டைசனை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியாவை கலாய்த்த கங்குலி
வீட்டுக்காவலில் ஆம் ஆத்மி நிர்வாகிகள்: கைதாகிறாரா மணீஷ் சிசோடியா?