மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 25) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
18-ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. இரண்டு நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று மாலை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்துள்ளோம். இதுதொடர்பாக இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்” என்று தெரிவித்தார்.
கடந்த 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறவில்லை. ஆனால், இந்தமுறை 100 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்தநிலையில், ஐந்தாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? புதிய ஆலோசனை!