ராஜன் குறை
மக்களாட்சியின் உயிர் மூச்சு என்பதே பேச்சுரிமை, கருத்துரிமைதான். மக்கள் சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் செய்யக்கூடாது. ஆனால், அவர்கள் கருத்தினை பொதுமன்றத்தில் வெளிப்படுத்த முழு உரிமை இருக்க வேண்டும் என்பதுதான் நவீன உலகின், மக்களாட்சி விழுமியங்களின் அடிப்படை.
இந்தக் கருத்துரிமைக்கு, பேச்சுரிமைக்கு எல்லைகள் உள்ளனவா? எதை வேண்டுமானால் பேசலாமா என்ற கேள்வி எழலாம். சில எல்லைகள் தேவைதான் – அவை என்னவென்றால் வேண்டுமென்றே துர்நோக்கத்துடன் பொய்களை, வதந்திகளை பரப்பக் கூடாது என்பதுதான் அந்த எல்லை.
உதாரணமாக சமீபத்தில் பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக ஒரு பொய்யான வதந்தியை காட்சி வடிவில் வாட்ஸ்அப் மூலம் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் பரப்பினார்கள். அந்த வதந்தியை நம்பி பல ஆயிரம் பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் பணியினை விட்டுவிட்டு தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச் செல்ல முனைந்தார்கள்.
இது அந்த தொழிலாளர்களின் நிம்மதியை, வருமானத்தைக் கெடுத்தது, இடர் புரிந்தது மட்டுமன்றி, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் பாதித்தது. இத்தகைய சமூகத் தீங்கு பயக்கும் பொய்யை, வதந்தியைப் பரப்புவது கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வராது. அது கருத்துமல்ல, அதன் நோக்கங்களும் தவறானவையாகும். எனவே அதைப் பரப்பியவர்கள் தண்டனைக்குரியவர்கள்.
சுருக்கமாகச் சொன்னால் ஒருவர் பேசுவதன், அவர் கருத்தின், பின்னணியில் உண்மை உள்ளதா, அந்த உண்மைகளின் அடிப்படையில் அவர் கருத்தை உருவாக்கிக் கொள்ள இடம் இருக்கிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவது கேள்வி, அவர் அந்தக் கருத்தை கூறுவதால் ஏதேனும் தீய விளைவுகள் ஏற்படுமா, சமூகத்தில் யாரேனும் பாதிக்கப்படுவார்களா என்பது மற்றொரு கேள்வி.
இந்த இரண்டுமே எதிர்மறையாக இருந்தால், அதாவது ஒருவரது கூற்று பொய்யான தகவலை அடிப்படையாகக் கொண்டது, அதனால் சிலர் பாதிப்படைகிறார்கள் என்றால்தான் அவர் மீது குற்றம் சுமத்த முடியும். ஒருவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினார் என்றோ, சமூகத்தில் தீய விளைவுகளை உருவாக்கினார் என்றோ கூறுவதற்கு சான்றுகள் வேண்டும்.
இந்தியாவில் இப்போது கருத்துரிமைக்கு, பேச்சுரிமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சென்ற வாரம் கன்னட நடிகர் சேதன் குமார் அஹிம்சா அவர் கருத்தை வெளிப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களில் முக்கியமானவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு அவர் பேச்சுக்காக அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் சேதன் குமார் அஹிம்சா
நாற்பது வயதாகும் கன்னட நடிகர் சேதன் குமார் அமெரிக்காவில் வளர்ந்தவர். நிகழ்கலைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் ஆய்வுக்காக பெங்களூரு வந்தபோது கன்னட திரைப்படத்தில் நடிக்க நேர்ந்தது. அந்தப் படம் வெற்றியடைந்ததால் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார்.
ஆனால், திரை வாழ்க்கையைவிட இவர் சமூக இயக்கங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பாட்டாளராக ஈடுபட்டு வருகிறார். அரசியல் கருத்துகளை துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருபவர். ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக நீதி, சிறுபான்மையினர் நலன், பால் புதுமையினர் நலன் எனப் பல்வேறு முற்போக்கு சிந்தனைகளுக்காகவும், இயக்கங்களுக்காகவும் குரல் கொடுத்து வருபவர். தன்னை சேதன் குமார் அஹிம்சா என்று அழைத்துக் கொள்கிறார்.
இவர் கடந்த வாரம் ஒரு டிவீட் பதிவினை இட்டார். இந்துத்துவம் பொய்களால் கட்டப்பட்டது; அதை உண்மையால்தான் முறியடிக்க முடியும். அந்த உண்மை என்பது சமத்துவம்தான் என்று கூறிய அவர் இந்துத்துவத்தின் பொய்களுக்கு சில உதாரணங்களையும் கொடுத்திருந்தார். இந்த டிவீட் சமூக அமைதியைத் குலைப்பது, கலவரங்களைத் தூண்டுவது என ஒரு இந்துத்துவவாதி புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறை இவரை கைது செய்துவிட்டது.
இந்துத்துவம் ஓர் அரசியல் கருத்தியல் என்றால், அதை ஏற்காதவர்களுக்கு அதை எதிர்த்து கருத்து சொல்ல எல்லா உரிமையும் இருக்க வேண்டும் அல்லவா? இந்துத்துவத்தை எதிர்ப்பதே சமூகத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்றால் மக்களாட்சி என்பதற்குத்தான் பொருள் என்ன? இதில் ஒரு சுவாரஸ்யமான பின்னணி என்னவென்றால் சமூகத்தில் வெறுப்பை விதைக்கும் இந்துத்துவ பிரச்சாரத்தை எதிர்த்துதான் அவர் டிவீட் போட்டார். அது என்னவென்று பார்ப்போம்.
திப்பு சுல்தானை கொன்றது யார்?
பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் (1751-1799) ஒரு பெரும் வீரராக கொண்டாடப்பட்டு வந்தவர். இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத்துடன் போரிட்டதற்காகவும், இவர் ஆட்சியின் சிறப்புகளுக்காகவும் பல கதைப்பாடல்களில் புகழ்ந்து பாடப்பட்டு வந்தவர். ஆங்கிலேயர்களுடனான போரில் 1799ஆம் ஆண்டு இறந்து போன இவரது புகழ் மக்களிடையே பிரபலமாக விளங்கி வந்தது. தமிழ்நாட்டில் கட்டபொம்மனை போல இவரும் வீரத்துக்காக கொண்டாடப்பட்டு வந்தார்.
ஆனால் சமீப காலங்களில் இவர் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் மதம் மாற கட்டாயப்படுத்தினார், இவர் முஸ்லிம் மத அரசை நிறுவ முயற்சி செய்தவர் என ஒரு வில்லனாக சித்திரிக்கும் பணியை இந்துத்துவர்கள் செய்து வருகின்றனர். வொக்கலிக சமூகத்தின் வரலாற்றை எழுதிய ஒருவர் அவர்களில் ஒரு பகுதியினர் திப்பு சுல்தானை எதிர்த்து நின்றதாக எழுதினார்.
இதனால் தூண்டப்பட்ட கரியப்பா என்ற இந்துத்துவ சார்பு எழுத்தாளர் “திப்பு சுல்தானின் உண்மையான கனவுகள்” என்ற நாடகத்தை எழுதினார். இதில் யூரி கெளடா, நஞ்சே கெளடா ஆகிய இரு வொக்கலிக சகோதரர்களே திப்பு சுல்தானை கொன்றவர்கள் என கற்பனை செய்து எழுதினார். பொன்னியின் செல்வனில் கல்கி பல கற்பனை பாத்திரங்களை உருவாக்கியது போல.
இந்தப் பாத்திரங்களுக்கோ, இவர்களால்தான் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார் என்பதற்கோ எந்தவிதமான வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது. போரில் ஆங்கிலேயர்கள் கோட்டையைக் கைப்பற்றிய பிறகு பிணங்களை அடையாளம் காணும்போது, திப்பு சுல்தானின் குண்டடி பட்டு இறந்த உடலையும் அடையாளம் கண்டனர் என்பதுதான் வரலாறு கூறும் தகவல்.
ஆனால், இந்த நாடகத்தைத் தொடர்ந்து சங்க பரிவார அமைப்புகள் இந்த வொக்கலிக சகோதரர்களை கதாநாயகர்களாகச் சித்திரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டு மருது சகோதரர்களின் ஓவிய வடிவங்களை களவாடி அவற்றை யூரி கெளடா, நஞ்சே கெளடா என்று அச்சிட்டு வருகின்றனர். திப்பு சுல்தானை கொன்று இந்து மதத்தைக் காத்தவர்கள் என பிரச்சாரம் செய்கின்றனர்.
சேதன் குமார் பொய்யைப் பொய்யெனக் கூறினார்
திப்பு சுல்தானை இந்து விரோதியாக சித்திரித்து, அவரைக் கொன்றவர்கள் என கற்பனையாக இரு வொக்கலிக சமூகத்து இளைஞர்களை சித்திரித்து சமூகத்தை பிளவுபடுத்தும் நோக்கத்தை கண்டித்தார் சேதன் குமார். அதன்பொருட்டுதான் அவர் இந்துத்துவம் பொய்களினால் கட்டப்பட்டது என டிவீட் போட்டார்.
அதில் மூன்று உதாரணங்களைச் சொன்னார். முதலாவது, ராமன் ராவணனைக் கொன்று அயோத்திக்குத் திரும்பியபோது இந்திய தேசம் உருவானது என்று சாவர்க்கர் கூறியது, இரண்டாவது, பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்றது, மூன்றாவது யூரி கெளடாவும், நஞ்சே கெளடாவும்தான் திப்பு சுல்தானை கொன்றார்கள் என்பது.
இவையெல்லாம் பொய்கள் என்பது சேதன் குமாரின் கருத்துகள். எப்படி இந்தக் கருத்துகளை பிரச்சாரம் செய்ய இந்துத்துவத்துக்கு உரிமை இருக்கிறதோ, அதே போல அவற்றை பொய் என்று மறுத்து பிரச்சாரம் செய்யவும் சேதன் குமாருக்கும், பிறருக்கும் உரிமை இருக்கிறது.
சங்க பரிவார அமைப்புகள் இந்த கருத்துகளை பிரச்சாரம் செய்ததால் நாட்டில் அமைதி குலைந்ததா, இல்லையா என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கையில், அதனை மறுத்துரைப்பதால் அமைதி குலையும் என சேதன் குமார் அஹிம்சாவை கைது செய்வது மக்களாட்சியைக் கொல்வதன்றி வேறென்னவாக பொருள்படும் என்பதே கேள்வி.
ராகுல் காந்தியின் நகைச்சுவையால் யாருக்கு பாதிப்பு?
லலித் மோடி என்பவர் ஒரு பெரும் பணக்காரர், வர்த்தகர். இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். ஐ.பி.எல் எனப்படும் இருபது ஓவர் பந்தயங்களை தொடங்கியவர் இவர்தான். நாளடைவில் இவர்மீது பல்வேறு மோசடி புகார்கள் குவிந்தன. இவர்மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்யும் முன்னரே இந்தியாவிலிருந்து வெளியேறி விட்டார்.
லலித் மோடி ராஜஸ்தான் முதல்வராக இருந்த வசுந்தராராஜே சிந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவர் ஒரு நிழல் அரசாங்கமே ராஜஸ்தானில் நட த்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இவர் இங்கிலாந்து செல்வதற்கு வசுந்தராராஜே சிந்தியா, சுஷ்மா சுராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உதவியதாகக் கூறப்படுவதை விக்கிபீடியாவில், இணைய தள செய்திகளில் காண முடிகிறது.
அதே போல நீரவ் மோடி என்பவர் பிரபல வைர வியாபாரி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என்று அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து இவரது பிரமாண்டமான வர்த்தக சாம்ராஜ்யம் சரிந்துவிட்டது. இவரும் நடவடிக்கை எடுக்கும் முன்னரே இந்தியாவில் இருந்து தப்பிவிட்டார் என்பது மட்டுமல்லாமல், அவர் இந்த அளவு மோசடி செய்ய அரசியல் தொடர்புகள் உதவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் 2019 ஏப்ரல் 13 அன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி எப்படி இது போன்ற பண முதலைகளெல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கிறார்கள், பாஜக அரசு சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியவர், லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி என்று குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் பெயர்களெல்லாமே மோடி என்று இருப்பது ஏன் என நகைச்சுவையாகக் கேட்டார்.
இவ்வாறு கூறியது மோடி என்று பெயர் உடையவர்கள் எல்லோரையும் இழிவு படுத்துவதாக பூர்னேஷ் மோடி என்ற பாஜக அரசியல்வாதி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ராகுல் காந்தி 2021ஆம் ஆண்டு அந்த வழக்கில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை சமர்ப்பித்தார். பின்னர் பூர்னேஷ் மோடியே இந்த வழக்கை நிறுத்தி வைக்கும்படி குஜராத் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதன்படி வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்ற மாதம் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்தின் ஊழல் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவுடன், திடீரென பூர்னேஷ் மோடி நிறுத்திவைக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து நட த்த அனுமதி கேட்டார். புதிய சாட்சியங்கள் கிடைத்துவிட்டதால் வழக்கை தொடர்வதாகக் கூறினார்.
அதற்குள் சூரத் நீதிமன்றத்தில் புதிய மாஜிஸ்டிரேட் பொறுப்பேற்றிருந்தார். அவரும் வழக்கை உடனே விசாரித்து அதிகபட்ச தண்டனையான இரண்டாண்டு சிறைவாசத்தை ராகுல் காந்திக்கு விதித்துவிட்டார்.
நாட்டில் பெரிய முறைகேடுகள், பொருளாதார குற்றங்கள் நடக்கும்போது எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை குற்றம் சொல்வதும், பிரதமரின் பங்கினை கேள்வி கேட்பதும் அரசியலில் இன்றியமையாதது. பிரதமரின் பெயரும் மோடி, பெரும் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்களும் மோடி என்ற பெயருடையவர்கள் என்ற அடிப்படையில் ராகுல் காந்தி நகைச்சுவையாக பேசினார் என்பது தெளிவு.
ராகுல் காந்தி பேசியதால் நரேந்திர மோடிக்கோ, வேறு எந்த ஒரு மோடிக்குமோ சமூகத்தில் இழுக்கு ஏற்பட்டதாக, எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டதாகக் கூற முடியாது. மோடி என்ற பெயருடையவர்கள் எத்தனையோ துறைகளில், தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் யாரும் எந்தவிதமாகவும் பாதிக்கப்பட்ட தற்கான சான்றுகள் கிடையாது. பிரதமர் மோடியே 2019ஆம் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தார். இன்றளவும் கணிசமான மக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார் என்றே கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ராகுல் காந்தி பேசியது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்பதை அனைவரும் அறிவார்கள். அப்படி இருக்கும்போது அவர் மோடி என்ற பெயர் உடையவர்களையோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையோ இழிவு படுத்திவிட்டார் என்று கூறுவதும், அதற்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை என்பதும் பேச்சு சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது என்பது தெளிவு.
அதுவும் ஓராண்டுக்கு மேல் வழக்கு தொடுத்தவரே நிறுத்தி வைத்த வழக்கு திடீரென எப்படி உயிர்பெற்று துரிதமாக விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்ட து என்பதை சிந்திக்கும் யாரும் இது அரசியல் உள் நோக்கத்துடன் நடந்துள்ளது என்று ஐயப்படாமல் இருக்க முடியாது.
நாட்டின் மிக முக்கியமான எதிர்க்கட்சி தலைவரே அவர் பேச்சுக்காக இப்படி தண்டிக்கப்பட முடியுமென்றால், வேறு யாருமே பேசத் தயங்கும் சூழலை உருவாக்க விரும்புகிறார்களா என்ற ஐயமும் தோன்றத்தான் செய்கிறது.
சேதன் குமார் அஹிம்சாவின் கைதையும், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் பதவிப் பறிப்பையும் இணைத்துப் பார்த்தால் மக்களாட்சியின் நிலை குறித்து கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் வெஜிடபுள் பிரியாணி!