விழுமியங்கள் உருவாக்குவதே  சட்டமும், நீதியும்: மக்களாட்சியின் அடித்தளத்தை அழிக்கலாமா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

மக்களாட்சியை உருவாக்கியது மானுட பொதுநலம் குறித்த விழுமியங்களே. அந்த விழுமியங்கள் பெற்று தந்தவையே சட்டங்கள். ஆனால், சட்டங்கள் குறைந்தபட்ச விதிகளைத்தான் கூறுமே தவிர, செயல்பாடுகள் அனைத்திற்கும் விதிகளை வகுக்க முடியாது. சாலையில் வாகனங்கள் இடது புறம் செல்ல வேண்டும் என்பது ஒரு விதியாக இருக்கலாம். ஆனால், வாகன ஒட்டிகள் எப்படி ஒருவரை ஒருவர் அனுசரிக்க வேண்டும், பாதசாரிகளை எப்படி கவனம் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் விழுமியங்களே தவிர, அனைத்தையும் சட்டமாக்க முடியாது.

நீதிமன்றங்கள் பல நேரங்களில் அதனால் சட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்பளிக்க முடியாதென்பதால், சட்டத்தின் பின்னால் செயல்படும் விழுமியங்களைக் கருத்தில் கொண்டுதான் சட்டங்களை அர்த்தப்படுத்தி நீதி வழங்கும். அதனால் ஒரு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை மற்றொரு வழக்கில் மேற்கோள் காட்டுவது வழக்கம். அதனால் விழுமியங்கள் என்ற கரும்பலகையில் வரையப்படும் கோடுகளே சட்டங்கள் என நாம் காண வேண்டும்.

மக்களாட்சி நடைமுறைகளைப் பொறுத்தவரை, மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் அதே நேரத்தில், எல்லைகளையும் வரையறுக்க வேண்டும். அரசின் ஒவ்வோர் அங்கமும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதுடன், அதில் சுயேச்சையாகச் செயல்படவும் இடமளிக்க வேண்டும். அதனால் பல நேரங்களில் விழுமியங்களை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று நம்பித்தான் சட்டங்களே இயற்றப்படுகின்றன.

பாரதீய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை அதற்கு மக்களாட்சி விழுமியங்களில் உள்ளார்ந்த நம்பிக்கை கிடையாது. அது பழைய மன்னராட்சியில் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்ட அதிகாரம், அனைவருக்கும் சமூகத்தில் வரையறுக்கப்பட்ட இடம், இறுக்கமான படிநிலை அமைப்பு – அதாவது பழைய வர்ணாசிரம தர்மம் ஆகியவற்றை நம்புவது. அதற்கு அரசு வல்லரசாக இருப்பதுதான் முக்கியமே தவிர, மக்களின் சுதந்திரம், குடி நபர்களின் சுதந்திரம் என்பவை முக்கியமானவையல்ல.

இரண்டு பிரச்சினைகளில் பாஜக எப்படி மக்களாட்சி விழுமியங்களைப் புறக்கணித்து நடக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம். ஒன்று, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு. இரண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள்.


Rahul Gandhi and BJP anti democracy
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு

ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கர்நாடக மாநிலம் கோலாரில் கிண்டலாகப் பேசிய ஒரு கருத்தை முன்னிட்டு அவர் மீது அவதூறு வழக்கினை தொடர்ந்தார் ஒரு குஜராத் மாநில சூரத் நகர் பாஜக சட்டமன்ற உறுப்பினர். அந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டினை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில் சூரத் நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனேயே ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் அவர் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு சிறை சென்றால், அவரால் இரண்டு ஆண்டுகள் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. நாடாளுமன்றத்தில் அவர் மோடி அரசின் பல பிறழ்வுகளைக் கடுமையாக விமர்சிப்பவர். குறிப்பாக கெளதம் அதானியின் பங்குச்சந்தை முறைகேடுகள், நிதி மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியவர். அப்படிப்பட்ட எதிர்க்கட்சி தலைவரை இரண்டாண்டுகள் சிறையில் அடைத்து பதவியைப் பறிக்கும்படி என்ன குற்றம் செய்தார் என்பதே கேள்வி.

அவர் 2019 தேர்தல் பேச்சில், “நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என்று எல்லா திருடர்கள் பேரும் ஏன் மோடி என்று இருக்கிறது?” என்று நகைச்சுவையாகக் கேட்டார். இதன் காணொலி பரவியதை ஒட்டியே குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பூர்னேஷ் மோடி அவதூறு வழக்கு போட்டார். அவர் வழக்கு என்னவென்றால் ராகுல் காந்தியின் பேச்சு மோடி என்ற பெயர் கொண்ட அவரையும், அந்த பெயர் கொண்ட அனைவரையும் அவதூறு செய்கிறது என்பதுதான்.  

ஒரு தனி நபரைக் குறித்து தவறான தகவலைச் சொல்லி அவர் கெளரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்துவது, சமூகத்தில் தலைகுனிவை ஏற்படுத்துவது போன்றவைதான் அவதூறு என்று கருதப்படும். பெரும்பாலும் அவ்விதமான வழக்குகளில் அபராதம் விதிப்பதுதான் நடைமுறை. வழக்கு போட்டவரும் நஷ்டஈடுதான் கேட்பார். நீதிமன்றமும் அபராதம்தான் விதிக்கும். மிக அபூர்வமாகவே அது சிறைத்தண்டனை அளவுக்குப் போகும். வேண்டுமென்றே திட்டமிட்டு ஒருவருக்கு களங்கம் கற்பித்திருந்தால்தான் அந்த அளவு கிரிமினல் குற்றச்சாட்டுக்கு இடமிருக்கும்.

ராகுல் காந்தி குறிப்பிட்டவர்களில் நீரவ் மோடி, லலித் மோடி ஆகிய இருவருமே மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவிலிருந்து தப்பி ஓடியவர்கள். அவர்களுக்கு பாஜக அரசு அனுசரணையாக இருந்தது என்பது எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் சிலவற்றின் குற்றச்சாட்டு. அதனால் பிரதமர் மோடியின் பெயரையும் சேர்த்து மூவர் பெயரும் மோடி என்று இருப்பதை கேலி செய்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் எல்லோரும் திருடர்கள் என்று கூறவில்லை. ஏன் எல்லா திருடர்கள் பெயரும் மோடி என்று இருக்கிறது என்றுதான் கேட்டார். அது நகைச்சுவையாகக் கேட்கப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. மோசடி செய்த நீரவ் மோடி, லலித் மோடி ஆகியவர்களையும் பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்புப்படுத்த எழுப்பப்பட்ட வேடிக்கையான கேள்வி.

அவர் பேசியதால் மோடி என்ற பெயருடைய அனைவருக்கும் இழுக்கு ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது நம்ப முடியாதது. அதற்கான ஆதாரங்கள் எதுவும் தரப்படவில்லை. அவர் குறிப்பாகத் தாக்கிய, கேலி செய்த நரேந்திர மோடியே அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகிவிட்டார். அதனால் எந்த மோடிக்கும் ராகுல் காந்தி பேச்சினால் எந்த இழுக்கும், தலைகுனிவும், இழப்புகளும் ஏற்படவில்லை என்பது திட்டவட்டமான உண்மை. அது தேர்தலில் கட்சிகளுக்கிடையே பரிமாறப்படும் குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதி என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.

மக்களாட்சி விழுமியங்களில் நம்பிக்கை இருந்தால் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்ய வேண்டும்? ராகுல் பேச்சினால் மோடி என்ற பெயருடைய எனக்கு எந்த இழுக்கும் ஏற்படவில்லை என்று கூற வேண்டும். அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் வழக்கை திரும்பப் பெற சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சி மீதான குற்றச்சாட்டுகளை சுதந்திரமாகப் பேச வகை செய்ய வேண்டும்.

ராகுல் காந்தியே தண்டிக்கப்படுவார் என்றால் யாருமே சுதந்திரமாகப் பேசத் தயங்குவார்கள். ஏனெனில் எந்த ஒரு குற்றச்சாட்டும், விமர்சனமும் அவதூறாகக் கருதப்பட வாய்ப்பு உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்துள்ளார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டக் கூடாதென்றால் எப்படி மக்களாட்சி சாத்தியமாகும்?

ராகுல் காந்தி வழக்கென்பது அவருடைய தனி நபர் பிரச்சினையல்ல. நாட்டில் மக்களாட்சியின் எதிர்காலம் குறித்தது.

Rahul Gandhi and BJP anti democracy

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முழுக்க, முழுக்க விழுமியங்களில் நம்பிக்கை வைத்து உருவாக்கப்பட்ட விதிமுறைகள் ஆளுநருக்குத்தான் பொருந்தும். ஏனென்றால் ஆளுநர் சட்டத்தின் ஆட்சியை, குடியரசை பிரதிநிதித்துவம் செய்பவர். மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது, அதிகாரத்தை ஒரே புள்ளியில் குவிக்கக் கூடாது என்பதன் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறை. உண்மை அதிகாரத்தையும், குறியீட்டு அதிகாரத்தையும் பிரிப்பதன் மூலம் மக்களாட்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணமே ஆளுநர் பதவிக்கு வழி வகுக்கிறது.  

மக்களாட்சியில் அதிகாரம் என்பது மக்களிடம்தான் அறுதியாகவும், உறுதியாகவும் உள்ளது. அவர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகள், அவர்களில் பெரும்பான்மையாக உள்ள கட்சியின் தலைவரான முதலமைச்சர் ஆகியோரே நாட்டை ஆளும் உண்மை அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய குடியரசின் உருவகமாக, குறியீடாக நின்று செயல்படுத்துபவர் ஆளுநர். அதனால்தான் குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரும். ஆளுநர்களும் கொடியேற்ற, சுதந்திர தினத்தன்று பிரதமரும், முதலமைச்சர்களும் கொடியேற்றும் வழக்கம் பின்பற்றப் படுகிறது.

பிரச்சினையே எங்கே வருகிறது என்றால் ஆளுநரை மாநில மக்கள் தேர்ந்தெடுக்காமல், ஒன்றிய அரசு நியமிப்பதில்தான் வருகிறது. ஒன்றிய அரசை ஆளும்கட்சியின் கைப்பாவையாக ஆளுநர்கள் செயல்படத் தொடங்கினால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அது பெரும் முரணை ஏற்படுத்துகிறது. கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவு, நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சி விழுமியங்கள் காற்றில் பறக்கின்றன. குறியீட்டு அதிகாரம், உண்மை அதிகாரத்தை மேலாதிக்கம் செய்ய முயற்சி செய்யும் அபத்தக் காட்சிகள் அரங்கேறுகின்றன.

உதாரணமாக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு எதையும் அரசியலமைப்பு சட்டம் விதிக்கவில்லை. இதற்குக் காரணம், விழுமியங்கள் மேலுள்ள நம்பிக்கைதான். நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஆளுநர், தன் குறியீட்டுத் தன்மையின் எல்லையை அறிந்து உண்மை அதிகாரத்தை மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்ந்தவராக இருப்பார் என்ற நம்பிக்கை.

கவர்னருக்கு காலக்கெடு விதிக்கவில்லை என்றால் அதன் பொருள் விரைந்து ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கைதான். ஆனால், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சட்டத்தை முடக்கிவிடலாம் என்று ஆளுநர் நினைப்பது, முதலமைச்சருக்கோ அவர் சார்ந்த கட்சிக்கோ எதிரானது அல்ல, அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிரானது. மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு எதேச்சதிகாரி போல பறித்துக்கொள்ள பார்க்கிறார் என்றுதான் பொருள்.

ஒரு குறியீடாக மட்டுமே விளங்க வேண்டிய ஆளுநர் எந்த தனிப்பட்ட அரசியல் கருத்துகளையும் பொதுவெளியில் பேசக்கூடாது. ரூபாய் நோட்டு என்பது ஒரு குறியீடு. ஐந்நூறு ரூபாய் என்று அதில் அச்சடித்திருந்தால் அந்த தாளின் மதிப்பு ஐந்நூறு ரூபாய் அல்ல. அந்த தாளை அச்சிட்டு வழங்கிய இந்திய அரசுதான் அதன் மதிப்பை உறுதி செய்கிறது. அரசு அந்தத் தாள் செல்லாது என்று கூறிவிட்டால் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது என்பதை நாம் அறிவோம்.

அதுபோல குடியரசின் குறியீடான ஆளுநருக்கு எந்த அரசியல் மதிப்பும் கிடையாது, இருக்கக் கூடாது. அவர் அந்த ரூபாய் தாளைப் போன்றவர். உண்மையான மதிப்பு என்பது மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த முதல்வரிடம்தான் உள்ளது. முதல்வரும், அமைச்சரவையும் எழுதிக்கொடுத்த உரையைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும்.  

ஆனால், தமிழ்நாட்டு ஆளுநர் ரவி தொடர்ந்து அத்துமீறி தனக்கில்லாத அதிகாரங்களைச் செயல்படுத்தத் துடிக்கிறார். சட்டமன்றம் இயற்றிய சட்டங்களை முடக்குகிறார். குற்றம் செய்த முந்தைய அரசின் அமைச்சர்கள் மீதான விசாரணைகளை, வழக்குகளை முடக்குகிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான அரசியல் கருத்துகளைப் பேசுகிறார். பிரச்சாரம் செய்கிறார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தமிழ்நாட்டு முதல்வர் நேற்று குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரின் பொருந்தா நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு, அதற்குத் தகுந்த பரிகாரம் காணும்படி கோரியுள்ளார். எந்த அளவு விழுமியங்கள் சீரழிக்கப்பட்டிருந்தால் இப்படி ஒரு நிலை உருவாகியிருக்கும் என்பதை பாஜக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Rahul Gandhi and BJP anti democracy

பாஜக மக்களாட்சியின் எதிரி

தொடக்கம் முதலே பாஜக கட்சியின் கருத்தியல் ஆசான்கள் மக்களாட்சியில் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் வலிமையான அரசு வேண்டுமென்றுதான் நினைப்பார்களே தவிர சுதந்திரமான, உரிமையுள்ள மக்கள் மீது நாட்டம் கொள்ள மாட்டார்கள். தேசம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை அரசுதானே தவிர மக்கள் அல்ல.

மக்களாட்சி விழுமியங்கள் என்பவை தேசம் என்பது மக்கள்தான், அவர்களிடையே நிலவும் முரண்கள்தான் அரசியல், அந்த முரண்கள் மோதும் களம்தான் தேர்தல் என்று புரிந்துகொள்வதில்தான் அடங்கியுள்ளது. பாஜக-வைப் பொறுத்தவரை அரசதிகாரமே குறி என்பதால் தேர்தலை அது அரசதிகாரத்தைக் கைப்பற்றும் உத்தியாகப் பார்க்கிறதே தவிர, அந்தக் கட்சியால் மக்களிடையே அவர்கள் தேவைகள், கோரிக்கைகள் சார்ந்து பணியாற்ற முடியவில்லை. அதனாலேயே பெரும்பாலான மாநிலங்களில் அதனால் வேரூன்ற முடியவில்லை.  

ஏழை, எளிய மக்கள், சாமானியர்கள் எல்லாம் பல்வேறு மாநில வட்டார மொழிகள்தான் பேசுவார்கள். வட நாட்டில் கூட மக்கள் அன்றாடம் பேசுவது போஜ்பூரி, மைதிலி, அவதி, ஹர்யான்வி, ராஜஸ்தானி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைத்தான். இந்தி மொழி என்பது அரசு சார்ந்த, ஊடகம் சார்ந்த மொழியாகத்தான் உள்ளது. பிற மாநிலங்களிலோ அரசியல் முழுக்கவும் மாநில மொழி சார்ந்துதான் உள்ளது.

இதனால் மக்களாட்சி என்பது மாநிலங்களிலேயே வேர் கொண்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் உருவான காலத்திலிருந்தே மாநிலங்களின் உருவாக்கத்தை, சுயாட்சியை எதிர்த்துவரும் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் அணிகள் ஒன்றிய அரசில் அதிகாரத்தைக் குவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

அதன் இறுதி இலக்கு மக்களாட்சி என்பதையே சிதைத்து, மன்னராட்சி போன்ற ஒற்றைப்புள்ளி எதேச்சதிகார ஆட்சியை உருவாக்குவதுதான். அதனால்தான் புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் செங்கோலை அவைத்தலைவர் இருக்கைக்கு அருகில் நிறுவியுள்ளது.

அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் பாஜக-வால் மக்களாட்சிக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். மக்களாட்சியைக் காக்க எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, மக்களாட்சி விழுமியங்களில் நம்பிக்கையுள்ள அனைவரும் அணி திரள்வது காலத்தின் கட்டாயம். ராகுல் காந்தி அவதூறு வழக்கிலிருந்து விடுவிப்பு, ஆர்.என்.ரவி பதவி நீக்கம் ஆகியவை அதற்கு அச்சாரமாக அமையுமா என்று பார்ப்போம்.

கட்டுரையாளர் குறிப்பு:
Rahul Gandhi and BJP anti democracy Rajan Kurai
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
 
 
+1
0
+1
0
+1
1
+1
9
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *