காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் பாரத் ஜோடா நடைப்பயணத்தின் இரண்டாவது கட்டத்தினை துவங்குகிறார்.
ராகுல் காந்தி கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 30-ஆம் தேதி வரை 12 மாநிலங்களில் 136 நாட்கள் 4,080 கி.மீ தூரம் பாரத் ஜோடா நடைப்பயணம் மேற்கொண்டார்.
இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நடைப்பயணத்தின் இரண்டாவது கட்ட அறிவிப்பு இன்று (டிசம்பர் 27) வெளியாகி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, “வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை ராகுல் காந்தி இரண்டாவது கட்ட நடைப்பயணத்தினை மேற்கொள்கிறார். இதற்கு ‘பாரத் நியாய யாத்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த நடைப்பயணத்தை துவக்கி வைக்கிறார்.
இந்தியாவின் கிழக்கு மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களில் 6,200 கி.மீ தூரம் ராகுல் நடைப்பயணம் செய்கிறார். இந்த நடைப்பயணமானது மணிப்பூரில் துவங்கி மகாராஷ்டிராவில் நிறைவடைய உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதலீட்டாளர்கள் மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழு!
நெருங்கும் புத்தாண்டு: தொடர் உயர்வில் தங்கம்!