மீண்டும் எம்.பி.ஆகும் ராகுல் : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழு விவரம்!

Published On:

| By Kavi

Rahul becomes an MP again

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ‘நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டோரை குறிப்பிட்டு எல்லா திருடர்களின் பெயருக்கு பின்னாலும் மோடி என்று வருகிறதே’ என்று விமர்சித்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி ‘மோடி’ சமூதாயத்தை அவதூறாக பேசியதாக குஜராத் எம்.எல்.ஏ பூர்ணேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எச். வர்மா மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

இந்த தண்டனை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

இதனிடையே ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு, அவரது அரசு பங்களாவை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சஞ்சய் குமார் அமர்வு விசாரித்தது.

ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர், “ராகுல் காந்தி மீது புகார் கொடுத்த புர்ணேஷ் மோடியின் துணை பெயர் உண்மையில் ‘மோடி’ அல்ல. அவரது குடும்ப பெயர் மோத் வனிகா சமாஜ் ஆகும்.

மோடி சமூகத்தில் 13 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் வழக்குத் தொடர்ந்தவர் யார் என்று பார்த்தால் பாஜகவைச் சேர்ந்தவர். இதுபோன்று பாஜகவினரால் ராகுல் மீது பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை.

ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்ட ஒருவர் கூட அவருக்கு எதிராக வழக்குத் தொடரவில்லை.

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருப்பது அரிதிலும் அரிதானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேச வேண்டும் என்று ராகுல் காந்திக்கு எந்த காரணமும் கிடையாது.

அவருக்கு எதிராக பதியப்பட்டது, கடத்தல், கொலை போன்ற கடுமையான வழக்குகள் அல்ல. ஜாமீன் பெறக் கூடிய சாதாரண வழக்குதான். அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் அவர் 8 ஆண்டுகள் மவுனமாக்கப்பட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய தண்டனை அவதூறு வழக்கில் தேவையற்றது. புகார்தாரர் ராகுல் கூறியதை தான் நேரடியாக கேட்கவில்லை. வாட்ஸ் அப் மெசேஜ், செய்தித் தாள்கள் வழியாகவும் தெரிந்துகொண்டதாக கூறுகிறார். அதோடு அவரே உயர் நீதிமன்றத்தை அணுகி அவதூறு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அதன்பின், அவரே கேட்டுக்கொண்டதற்கு பிறகு விசாரணை  நடத்தப்பட்டு ஒரே மாதத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனநாயகத்தில் நமக்குள் மாற்றுக் கருத்துகள் உள்ளன. ராகுல் காந்தி ஒன்றும் கொடுங்குற்றம் செய்யவில்லை. ராகுல் காந்தியால் ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற அமர்வுக்கு செல்ல முடியவில்லை. உச்ச நீதிமன்றம் இப்போது தண்டனையை நிறுத்தி வைக்கவில்லை என்றால் முழு பதவிகாலத்தையும் இழக்க நேரிடும்.

எனவே அவர் மீதான தண்டையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து புகார்தாரர் புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, “ராகுல் காந்தி பேசிய வீடியோ நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை கேட்ட ஒரு நபர் சாட்சியாக ஆஜர்படுத்தப்பட்டார்.

‘மோடி’ என்பது பிரதமரின் குடும்ப பெயர் என்பதால் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறு செய்ய வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் நோக்கம். விசாரணை நீதிமன்றத்தின் முன், தான் பேசியது தனக்கு நினைவில் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அதுபோன்று ‘ரஃபேல் விமானம் விவகாரத்தில் பிரதமரை உச்ச நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது’ என்று ராகுல் காந்தி கூறியதற்காக அவர் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இதுபோன்று தொடர்ந்து பேசி வரும் அவருக்கு சலுகைகள் கோர உரிமையில்லை. எனவே அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைக்கக் கூடாது” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “ராகுல் காந்தி மீதான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கிறோம்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

“அவதூறு வழக்கில் உச்சபட்ச தண்டனை வழங்கியதற்கு கீழமை நீதிமன்ற நீதிபதி போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் கூறவில்லை. ராகுல் காந்தி போன்று பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் பல்வேறு பக்கங்களை கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டு ஆண்டு தண்டனை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார்.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையின் மூலம் ஒரு நபரின் உரிமை மட்டுமல்ல ஒரு தொகுதி மக்களின் உரிமையே பாதிக்கப்படுகிறது. அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி மீதான இரண்டு ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டதன் மூலம் அவர் மீண்டும் எம்.பி.யாக தொடர்வார். மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதும் அவர் பேசுவார் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பிரியா

சானியா மிர்சா குறித்தான பயோவை நீக்கிய சோயிப் மாலிக்

தப்பிப் பிழைத்தது ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி.பதவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment