பிரதமர் மோடி ஒரு கோழை என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (மார்ச் 26) டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.
“இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை. எங்கே என் மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புங்கள் பார்ப்போம். அதிகாரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கக் கூடிய கோழை பிரதமர். திமிர் பிடித்தவர். திமிர் பிடித்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.
“எனது சகோதரர் பிரதமரிடம் சில கேள்விகள் மட்டுமே கேட்டார். உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. பயந்துவிட்டீர்கள். திமிர்பிடித்தவர்கள் மற்றும் எதேச்சதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதபோது தங்களது வலிமையை பயன்படுத்தி மக்களை அடிபணிய செய்கிறார்கள்.
கேள்வி எழுப்புபவர்களை நசுக்குகிறார்கள். இந்த ஒட்டுமொத்த அரசாங்கமும், அமைச்சர்களும், எம்.பி.க்களும் ஏன் ஒரே ஒரு மனிதரை காப்பாற்ற பார்க்கிறது.
நாட்டின் செல்வத்தை எல்லாம் அதானியிடம் கொடுக்கிற அளவுக்கு அவரிடம் என்ன இருக்கிறது. அவரது பேரை கேட்டால் நீங்கள் சலசலக்கிறீர்கள். அவரை காப்பாற்ற துடிக்கிறீர்கள்.
அதுபோன்று விசாரணை அமைப்புகளை கொண்டு பயமுறுத்தலாம் என்று நினைக்காதீர்கள். நாங்கள் எதற்கும் பயப்பட போவதில்லை. வலுவாக போராடுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் என் சகோதரரை பப்பு என்று அழைத்தீர்கள். உண்மை தெரியாமல் பப்பு என்று அழைத்துவிட்டீர்கள். அவர் பாதயாத்திரையில் இறங்கியதும் பப்பு இல்லை என்பது தெரியவந்தது. அவர்கள் யார் என்பதும் தெரியவந்தது.
லட்சக்கணக்கான மக்கள் அவருடன் நடந்தார்கள். அதனால் உங்களுக்கு பயம் வந்துவிட்டது.
என் தந்தையை நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தினார்கள். என் சகோதரரை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்கள். ராகுல் காந்திக்கு தனது தந்தை யார் என்று தெரியாது எனக் கூறி எனது தாயை அமைச்சர்கள் அவமானப்படுத்தினர்.
சமீபத்தில் பிரதமர் எங்கள் குடும்பத்தையே அவமானப்படுத்தினார். எங்களின் பெயருக்கு பின்னால் நேரு என போடவில்லை என கேட்டார். அவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு ஏன் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படவில்லை. அவரை ஏன் நாடாளுமன்றத்தில் வெளியேற்றவில்லை. அவரை ஏன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை விதிக்கவில்லை” என கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தியை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா காந்தி, “எனது சகோதரர் என்ன செய்தார்?. நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் சென்று அவரை கட்டிப்பிடித்தார். சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும் உங்களை வெறுக்கவில்லை என்று பிரதமரிடம் சொன்னார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய காங்கிரஸ் இன்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி மக்களின் குரலை உயர்த்தவும், அவர்களின் உரிமைக்காகவும் போராடுகிறார்.
ராகுல் காந்தி வழக்கில், அவர் அதானியை பற்றி பேசிய பிறகு விசாரணை, தண்டனை, தீர்ப்பு என அனைத்தும் மிக வேகமாக நடந்தது” என்று குறிப்பிட்டார்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்லும் எடப்பாடி
மெரினாவில் வயலின் வாசித்த இளைஞர்… தேடி வந்த காவல்துறை!