திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் விரைவில் கூட்டணியைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு, தமிழக நீதித் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று (அக்டோபர் 21) பதிலளித்துள்ளார்.
அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்கவிழா கூட்டம் நேற்று நெல்லையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக தொடங்கிய காலம், முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் சந்தித்த பிரச்சினைகள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி அதிமுகவின் வாக்கு சதவீதம் 2019 நாடாளுமன்ற தேர்தலை விட ஒரு சதவீதம் கூடியிருக்கிறது போன்ற விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும் “திமுக ஆட்சிக்காலத்தில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்கள் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை திமுக அறிமுகப்படுத்தியது. ஆனால் மழைக்காலங்களில் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகுகிறது, பெரும்பாலான பேருந்துகள் பழுதடைந்துள்ளன. மக்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியவில்லை” என தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.
மேலும் திமுக கூட்டணி பற்றிப் பேசிய அவர் “திமுக சொந்த கட்சியை நம்பவில்லை. கூட்டணிக் கட்சிகளை நம்பிதான் திமுக இருக்கிறது. அதிமுக சொந்தக் காலில் நிற்கிறது.
சொந்தக் காலில் நிற்பவர்களுக்குத்தான் பலம் அதிகம். கூட்டணி பிரிந்து போய்விட்டால், திமுக என்ன செய்யும்?
திமுக கூட்டணிக்குள் புகைந்துகொண்டிருக்கிறது. விரைவாக நெருப்பு பற்றிக்கொள்ளும். அதற்குப் பின் கூட்டணிக் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகிவிடுவார்கள்” என்று பேசியிருந்தார்.
இதற்குச் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக நீதி துறை அமைச்சர் ரகுபதி “ எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார். அவருக்கு வேறு வேலை கிடையாது. திமுக கூட்டணியை அவரால் உடைக்க முடியாது.
அவர் சொல்வதெல்லாம் அவர் சார்ந்திருக்கும் கட்சிகளுக்குத்தான் ஏற்படும் தவிர, திமுக கூட்டணிக்கு ஏற்படாது.” என்று ரகுபதி பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
குழந்தை பிறந்த போது தொப்புள் கொடியை வெட்டிய இர்பான்… திருந்தாத வருந்தாத நிலை!
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்!
”எங்ககிட்ட கொள்ளையடிச்சதை திரும்ப கொடு” : மன்னர் சார்லஸை மிரள வைத்த ஆஸ்திரேலிய எம்.பி