எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் ராகுல் காந்தி டெல்லி லுடியன்ஸில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடி பெயர் குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி பேசியிருந்தார். இது தொடர்பாக 2019-ல் பாஜகவைச் சேர்ந்த புருனேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இந்த தீர்ப்பு தொடர்பாக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற செயலாளர் உத்பால் குமார் சிங், மார்ச் 23 ஆம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று (மார்ச் 24) அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், “மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டில் தங்குவதற்கு உரிமை இல்லை.
விதிகளின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் அவர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டை காலி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
மோனிஷா
அன்று ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரையே… பத்து வருட ஃப்ளாஷ் பேக்!
டிஜிட்டல் திண்ணை: லீகல் மிராகிள்… ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், தகுதி நீக்கமும்!