காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று (மார்ச் 26) போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி மோடி பெயர் குறித்துப் பேசியிருந்தார்.
இது தொடர்பாக 2019-ல் பாஜகவைச் சேர்ந்த புருனேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மார்ச் 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும் இந்த தீர்ப்பு தொடர்பாக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த நாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,
”மோடி அதானி உறவு குறித்துப் பேசியதால் தான் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பிரதமர் மற்றும் தொழில் அதிபர் அதானி இடையேயான உறவு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதற்குப் பதிலடியாக ராகுல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
ராகுல் தனியாக இல்லை என்பதை உணர்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள காந்தி சிலை முன்பாக இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும்.
போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
டெல்லி ராஜ்காட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, பொதுச்செயலாளர்கள் வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மாநில முதல்வர்களான அசோக்கெலாட், பூபேஷ்பாகல் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று சென்னை பூவிருந்தவல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.
மோனிஷா
திருப்பதி பக்தர்கள் தரிசனம்: டிக்கெட்டுகள் நாளை வெளியீடு!
கிச்சன் கீர்த்தனா: சாப்பிட மறுக்கும் குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி?