அண்ணாமலை கட்டியிருக்கும் அந்த கடிகாரத்திற்கான ரசீதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார் மேலும் ரசீது இருக்கா? இல்லையா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைபோர் நடைபெற்று வருகிறது.
அண்ணாமலை கட்டியிருக்கும் கைக்கடிகாரம் தொடர்பாக எழுந்த சர்சை குறித்து ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். அந்த பதிவில், ” 4 ஆடுகள் மட்டுமே வளர்த்து, 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “ஆகஸ்ட் 2011-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 20 ) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ’ வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் நோக்கத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. பேரணி செல்லும் போது தன்னுடைய சொத்து மதிப்பை வெளியிடுவேன் என்று சொல்வது ஏற்கனவே அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போதே அண்ணாமலையின் சொத்து பட்டியல் அதில் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இணைக்கப்பட்ட சொத்து பட்டியல் அதில் இருக்கிறது. அதை திரும்ப ஒருமுறை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன், வாங்கிய கடிகாரத்திற்கு ரசீது இருக்கா? இல்லையா? தேர்தலுக்கு முன்பு வாங்கியிருந்தால் கணக்கில் காட்டி இருக்க வேண்டும். தேர்தலுக்கு பின்னர் வாங்கியிருந்தால் ரசீதை ஒரு மணி நேரத்தில் வெளியிடுங்கள் என்று கேட்டு இருந்தேன். மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இல்லாமல் போகலாம். ஆனால் அண்ணாமலை மடியில் கனம் இருக்கிறது. அதனால் தான் பயத்துடன் இருக்கிறார். தூய்மையான அரசியல்வாதி என்றால் ரசீதை ஒரு மணி நேரத்தில் வெளியிட்டு இருக்கலாம். அந்த கடிகாரம் யாரோ வெகுமதியாக கொடுத்தது” என்றார்.
மேலும், நீ உண்மையானவனாக இரு, நேர்மையானவாக இரு எனவும் அண்ணாமலை வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டுவதாக பல்வேறு கருத்துகள் வருகிறது என்றும் அவர் கையில் ரசீது இருந்தால் இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சினிமாவில் வசனகர்த்தாவுக்கான இடம்: ‘விஜயானந்த்’ மதுரகவி பேட்டி!
புதிய வருவாய்த்துறை கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர்