ரேபரேலி… சோனியாவின் மார்ஜினை முறியடித்த ராகுல்

ரேபரேலி தொகுதியில் தனது தாய் சோனியா காந்தியை காட்டிலும் இரு மடங்கு கூடுதல் வாக்குகளை ராகுல் காந்தி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் ரேபரேலி , வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார்.

1952 இல் நிறுவப்பட்ட மக்களவைத் தொகுதியான ரேபரேலி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள குறிப்பிடத்தக்க நாடாளுமன்றத் தொகுதியாக உள்ளது. காங்கிரஸின் கோட்டையாக அறியப்படுகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005 முதல் இந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்று வந்தார்.

இந்த முறை அவர் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது மகன் ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிட்டார்.

தனது மகனுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோனியா காந்தி, “என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் என்னை எப்படி உங்கள் சொந்தமாக கருதினீர்களோ, இனி ராகுலை உங்கள் சொந்தமாக பார்க்க வேண்டும். அவர் உங்களை ஏமாற்ற மாட்டார்” என்று கூறி வாக்குச்சேகரித்தார்.

இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து இன்று(ஜூன் 4) முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி, 388742 வாக்குகள்  முன்னிலையில் இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புபடி 684598 வாக்குகள் பெற்றுள்ளார் ராகுல்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 295856 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

2019ல் தினேஷ் பிரதாப் சிங்கை 1,67,178 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருந்தார் சோனியா காந்தி.

இந்நிலையில் சோனியா காந்தியை காட்டிலும் இருமடங்கு வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் ராகுல் காந்தி.

வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ ஆனி ராஜவைக் காட்டிலும் 364422 வாக்குவித்தியாசத்தில், 647445 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். வயநாட்டிலும் ராகுலின் வெற்றி உறுதியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்!

அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பாஜக தோல்வி முகம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts