சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசில் ராதிகா புகார்!

Published On:

| By Selvam

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (மே 16) ராதிகா சரத்குமாரின் மேலாளர் நடேசன் புகாரளித்தார்.

சமீபத்தில் காஞ்சிபுரம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஆகியோரை ஆபாசமாக அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசினார்.

அவரது பேச்சை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பாஜக நிர்வாகிகள், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.

இதுதொடர்பாக ராதிகா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஏன் டா படுபாவி. ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே.

அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற. உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்” என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.

ராதிகா சரத்குமார் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் மின்னம்பலம் கேட்டபோது, “இதுகுறித்து துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையிடம் தெரிவித்திருக்கிறேன்.

அவர் தலைமையிடம் பேசி ஒரு முடிவெடுப்பார். இது தேர்தலுக்கு முன்பு பேசிய வீடியோ என்று சொல்கிறார்கள்” என தெரிவித்தார்.

இந்தநிலையில், ராதிகா மற்றும் சரத்குமாரின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் ராதிகாவின் மேலாளர் நடேசன் இன்று புகாரளித்தார்.

கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கருடன் தொடர்பில் இருந்த திமுக அமைச்சர்கள்!

அமலாக்கத்துறை கைது… உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel