”அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்” என ஆர்.பி. உதயகுமார் மதுரை எஸ்.பி அலுவலகத்தில் இன்று (நவம்பர் 11) தெரிவித்துள்ளார்.
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள அத்திபட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் இரவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் திருமங்கலம் நோக்கி காரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்று கொண்டிருந்தார்.
மங்கல்ரேவு பகுதியில் அவரது காரை திடீரென வழிமறித்த அமமுக நிர்வாகிகள், டிடிவி தினகரன் குறித்து அவதூறு தெரிவித்த ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தாக்குதல் நடத்த முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.
இதில் காயமடைந்த உசிலம்பட்டியை சேர்ந்த மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார், விஷ்ணு, அபினேஷ் மூவரும் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், அதில் ஈடுபட்டதாக அமமுகவினர் 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சேடப்பட்டி காவல்நிலையத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யபட்டது.
இந்த நிலையில் தன்னை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் ஆர்.பி உதயகுமார் இன்று புகார் மனு அளித்தார்.
சட்டப்படி நடவடிக்கை வேண்டும்!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “2026 தேர்தலை முன்னிட்டு நாங்கள் நடத்துகிற கூட்டங்கள் மற்ற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுகவினரால் தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்கு அச்சுறுத்துல் வருகிறது. மதுரையில் வன்முறையை கையில் எடுத்தால் அது அவர்களுக்கு தான் பாதகமாக அமையும்.
பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு இல்லை. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எங்கள் உயிருக்கோ, எங்கள் உடைமைக்கோ இனி பாதிப்பு ஏற்படுமானால், அதற்கு அவர்களே காரணம்.
சட்டத்தின் மீதும், காவல்துறை மீதும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்” என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்த கமல்
51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவி ஏற்றார்!
டெல்லி கணேஷின் உதவும் உள்ளம்… யூடியூப்பரின் உருக்கமான பேஸ்புக் பதிவு!