ஸ்ரீராம் சர்மா
அன்றொரு நாள் 8.2.2023 தேதியிட்ட “மல்லல் மூதூர் வய வேந்தே” எனும் எனது மின்னம்பலக் கட்டுரை ஒன்றில்..
“வேங்கை வயல்” குறித்த ஆதங்கக் கேள்வி ஒன்றினை சாதாரணதோர் சமூக எழுத்தாளனாக முதல்வர் மு.க ஸ்டாலினை நோக்கி கொதித்துக் எறிந்தேன்.
“முதல்வரே, கடந்த ஆட்சியில், 2019 ஜனவரி 10 ஆம் தேதியன்று நாற்பது வயதான சுதாகர் என்பவரது சடலம் ஒன்று ராமநாதபுர மாவட்டத்தின் குடிநீர் தொட்டியில் மிதந்தது. அது குறித்து எந்த அதிர்ச்சியும் அன்று எழவில்லை. காரணம், அது தலைமையற்று அல்லாடியதொரு அடிமை ஆட்சி.
தங்களது ஆட்சி அப்படிப்பட்டதாக இருக்காது. முந்தைய ஆட்சிக்கு மேலானதாக இருக்கும் என நம்பித்தானே மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்.
உளவுத்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் உங்களைத் தானே ஓட்டுப் போட்ட மக்கள் கேள்வி கேட்பார்கள். உங்களது ஆட்சியின் மாட்சியை நீங்கள்தான் நிரூபித்தாக வேண்டும் அல்லவா? விரைந்து செயலாற்ற தயங்குவதேன்?” என புறநானூற்று வரிகள் தோயக் கேட்டேன்.
இன்று அவரது தலைமையில் இருக்கும் போலீஸ் துறையானது வேங்கை வயல் குற்றச் செயலின் உள்ளோடி அரும்பாடுபட்டுப் போராடி தனது ஆய்வறிக்கையை வெளியுலகுக்கு சொல்லியிருக்கின்றது.
வேங்கை வயலில் அவசரப்பட்ட சிலபேர்களால் சதி செய்யப்பட்டிருப்பதாக சகல ஆதாரங்களோடு போலீஸ் சொல்கின்றது.
சிபிஐ விசாரணை கேட்கப்படுகிறது. ஆகட்டும்.
இரண்டாண்டுக் காலமாக இந்த சமூகத்தை குற்ற உணர்வில் சிக்க வைத்த அயோக்கியர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்க அது வழிவகை செய்யட்டும்.
*******
என் சொல்ல ? எப்படித்தான் சொல்ல ?
அன்றந்த நாளில் வெடித்து விதிர்த்த எனது வேதனையும் வெதும்பலும் பொய்யாய் போனதோ ? எப்படியெல்லாம் எழுதிக் கேட்டேன் ?
தமிழ்நாட்டின் முதல்வரே,
கடந்த நாட்களில், குடிநீர் தொட்டிகளை குறிவைத்தபடி தொடர்ந்து எழுந்து வரும் செய்திகள் அறிவுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வைத்திருக்கின்றன.
வேங்கைவயல் மலமும் – கடலூர் இளைஞரின் பிணமும் – சிவகாசியில் வீசி எறியப்பட்ட நாயின் உடலமும் நாகரீகத் தமிழ் சமூகத்துக்கு கொஞ்சமும் ஒவ்வாதது. இதுபோன்ற செய்கைகள் தொடர்வது அவலமானது.
குற்றங்களின் மூலம் கண்டு அதை முளையிலேயே கிள்ளி அழித்து விடுவது நல்லரசாங்கத்துக்கு அவசியமாகிறது.
இதுபோன்ற குற்றச் செய்கைகளை மென்கரத்தோடு அணுகுவது நல்லதல்லவென உரசி எச்சரிப்பது அரச கடமையாகிறது.
உலகப் போர் வரலாற்றில், எதிரிகளை அழித்தொழிக்க நீரில் விஷம் கலப்பதையே முதன்மையாக கையாள்வார்களாம். பெரும் பேர் கொண்ட அலெக்ஸாண்டரையும் கூட எதிரிகள் ஆற்றில் விஷம் கலந்தே கொன்றதாக சொல்கின்றன மேற்கத்தியர்கள் எழுதிய பக்கங்கள்.
நியாய தர்மத்துக்குப் பேர் போன தமிழ்நாட்டில், தங்கள் சொந்த மக்கள் மேலேயே மலத் தண்ணீர் பீய்ச்சும் கொச்சைத் தாக்குதலை பாய்ச்சத் துணிவார்களெனில், அவர்களை எந்தக் காரணம் கொண்டும் விட்டு வைக்கக் கூடாது. அந்த அவலம் சுற்றுப்பட்ட ஊர் மக்களின் மனதில் வாழ்நாள் அசூயையாகிவிடும்.
அவர்கள் சமூகமாகவும் சுமூகமாகவும் ஒன்றிணைந்து வாழ வழி தடை செய்து மனதளவில் வாழ்நாள் போராட்டமாகி விடும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
ஆம், நீரில் முங்கிக் கிடக்குமொரு சடலத்திருந்து ஆயிரமாயிரம் பாக்டீரியாக்கள் உண்டாகுமென்றும், அது பலப்பல வியாதிகளை பரப்பி ஊராரின் உயிருக்கு கேடு விளைவித்துவிடும் என்றும் அச்சப்படுகிறார்கள் விவரமறிந்த மருத்துவர்கள்.
ஒருதுளி விஷம் வைத்து ஒருவரைக் கொல்பவனுக்கு தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையும் சரி எனில்,
ஊருக்கு பொதுவானதொரு குடிநீர் தொட்டிக்குள் விஷம் வைத்து ஓராயிரம் உயிர்களைக் கொல்லத் துணிபவனுக்கு என்ன தண்டனை என்பதை சட்டத்தின் மாட்சி கொண்டும், தங்கள் இறையாண்மையின் அதிகாரத்தைக் கொண்டும் நியாயத் தீர்ப்பு ஒன்றை விரைந்து வழங்குங்கள்.
இந்த ஆட்சி நிலைபெற்று விடக்கூடாதென விழையும் சிலர் எந்த அளவுக்கும் சென்று அரசியலாடக் கூடும். விட்டுக் கொடுத்து விடாதீர்கள் !
அனைவருக்கும் பொதுவான முதலமைச்சராக நின்று நியாயமான முடிவொன்றை தாங்கள் எடுத்துச் சொன்னால் ஒட்டு மொத்த தமிழர்களும் உங்களை ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள் !
தண்ணீரை பழிப்பது தாயைப் பழிப்பதற்கு சமமாகும் என்பது முன்னோர் வாக்கு.
நியாய தர்மத்துக்குப் பேர்போன தமிழ்நாட்டின் முதல்வரே, எந்தக் காரணம் கொண்டும் குற்றவாளிகளை தண்டிக்கத் தயங்காதீர்கள்.
அப்பாவி மக்களின் நன்னீரை குறிவைக்கும் சமூக விரோதிகளை ஜனநாயக கோல் கொண்டு அடித்து வீழ்த்துங்கள்.
*******
மின்னம்பலத்தில் அன்று ஆதங்கத்தோடு எழுதி கேட்டதற்கு இன்று பதில் கிடைத்து விட்டது. முதல்வரின் தலைமை கொண்ட போலீஸ் துறைக்கு எனது நெஞ்சார்ந்த சல்யூட்!
முடிவாக…
யாரோ சிலர் செய்து விட்ட கொடுஞ்செயலுக்காக வேங்கைவயலை வெறுத்து விடக் கூடாது. நல்லோர் வாழும் நயத்தகு தமிழகத்தின் அங்கமாகவே அது ஜொலிக்கிறது.
யாரென்ன சொன்னாலும் “வேங்கை வயல்” நமக்கு மிக நெருக்கமானது.
அங்கு சென்று, வெண்ணிறமும் மஞ்சளுமாய் பூத்துக் குலுங்கும் நற்றிணையில் பாடப் பெற்ற புன்னை மரம் ஒன்றை அந்த மண்ணில் நட்டு வைத்து வரவேண்டும் எனும் ஆவல் ஓங்குகின்றது.
ஆம்,
சிதறாது நம் தமிழினம் !
செத்தாலும் நாம் ஓரினம் !
********
கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.