நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒவ்வொரு மக்களவைத் தொகுதி வாரியாக அதிமுக தலைமை கழகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூலை 25,26ஆம் தேதிகளில் ஈரோடு, திருப்பூர் மக்களவைத் தொகுதி தோல்விக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நோக்கி சரமாரியாக அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதாகவும் அதை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் அமைதியுடன் கவனித்து வந்ததாகவும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் பேசினோம்,
“சில வாரங்களுக்கு முன்பு சேலத்தில் இருக்கக்கூடிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்த ஆறு பேரில் செங்கோட்டையனும் ஒருவர். அப்போது அதிமுகவில் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டவரை மீண்டும் இணைத்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்று இந்த ஆறு பேர் வற்புறுத்தியதாகவும் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் தீயாகப் பரவின.
எல்லா தொலைக்காட்சிகளிலும் யூடியூப் சேனல்களிலும் இதுவே விவாத பொருளானது. இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியிலும் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில்தான் ஈரோடு, திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் தோல்வி குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கோபி காளிதாஸ் என்ற தலைமை கழக பேச்சாளர் செங்கோட்டையனை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கோபி சட்டமன்ற தொகுதி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. கோபி தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை குறைந்திருப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் சில வாரங்களுக்கு முன்பு பொதுச் செயலாளர் இல்லத்தில் ஆறு முன்னாள் நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக ஒரு தகவல் பரவியது இதனால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
அண்ணன் செங்கோட்டையன் அந்த ஆறு பேரில் ஒருவராக இருந்தார் என்றும் அந்த செய்திகளில் வந்தன. ஆனால் அது குறித்து ஏன் அண்ணன் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்று தலைமை கழக பேச்சாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு செங்கோட்டையன் நேரடியாக பதில் அளிக்காமல் மேடையில் பேசினால் மட்டும் போதாது. ஃபீல்டில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று மழுப்பலாக ஒரு பதிலை சொல்லி அதனை கடந்து விட்டார்” என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டபொம்மன் சிலை எங்கே? – நெல்லை கலெக்டருக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்!
Paris Olympics 2024: இந்தியாவின் பதக்க வேட்டை ஸ்டார்ட்… வெண்கலத்தை தட்டித்தூக்கிய மனுபாக்கர்