குவாரி, குட்காவில் லஞ்சம்-கூவத்தூரில் செலவு: விஜயபாஸ்கரை சிக்க வைக்கும் ஐடி

அரசியல்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டியின் குவாரி நிறுவனம் மற்றும் குட்கா நிறுவனங்களிடம் இருந்து ரூ. 87.90கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 117.46ஏக்கர் நிலம் மற்றும் 3வங்கிக்கணக்குகளை முடக்கியது.

இதை எதிர்த்து விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

எம்எல்ஏ சம்பளம் வாங்கும் வங்கி கணக்கு உட்பட 3வங்கிக் கணக்குகளை முடக்கியதால் தொகுதிக்கு எந்த செலவும் செய்ய முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கில் வருமான வரித்துறை சார்பில் அதன் வரி மீட்பு அதிகாரி (Tax recovery Officer) குமார் தீபக் ராஜ் நேற்று(டிசம்பர் 1) பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், “விஜயபாஸ்கர் மீதான சோதனை நடவடிக்கைகளின் போது முக்கியத்துவமான பொருட்கள் ( enormous material) கைப்பற்றப்பட்டன.

சேகர் ரெட்டியின் எஸ்ஆர்எஸ் குவாரி நிறுவனத்தில் இருந்து ரூ.85.45 கோடியும், குட்கா/பான் மசாலா உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.2.45 கோடியும் பெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவியேற்றபோது, கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்க வைப்பதற்காக, விஜயபாஸ்கர் கணக்கில் காட்டாத பணத்தில் இருந்து ரூ. 30.90 லட்சம் செலவு செய்துள்ளார்.

quarry kutka bribe spending in koovathur Vijayabaskar case

மேலும், தனது புளூ மெட்டல்ஸ் நிறுவனத்தின் மூலம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பல கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதும், அந்த வருமானத்தை மறைத்ததும் சோதனையில் தெரிய வந்திருக்கிறது.

சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விஜயபாஸ்கர் பராமரித்து வரும் கணக்கு, விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருந்ததற்கான சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்குதான், அது பிரத்யேக சம்பள கணக்கு இல்லை.  

2022-23 நிதியாண்டில் தமிழக அரசால் அந்தக் கணக்கில் ரூ. 8.50 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் அதிலிருந்து தனது தனிப்பட்ட செலவினங்களுக்காக மட்டுமே பணத்தைப் பெற்றுள்ளார். அவரது தொகுதி தொடர்பான எந்தச் செலவுகளுக்கும் பணம் எடுக்கவில்லை.

வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி விஜயபாஸ்கர் ரூ. 206.42 கோடி வரி பாக்கி வைத்துள்ளார்.வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தாததால்  சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன” என்று தீபக்ராஜ் பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறையின் இந்த பதில் மனு மூலம் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி இந்த புகார்களுக்கு விஜயபாஸ்கர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலை.ரா

டாஸ்மாக்: தேங்கிக் கிடக்கும் மதுபானங்கள்

சாமி சாமி பாடல்: வைரலில் ரஷ்ய பெண்கள் நடனம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *