மோடி – புதின் சந்திப்பு: பேசியது என்ன?

அரசியல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (செப்டம்பர் 16) சந்தித்துப் பேசினர்.

ரஷ்யா – உக்ரைன் படையெடுப்பில் இதுவரை இந்தியா நடுநிலையான போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

உக்ரைன், ரஷ்யா ஆகிய இருதரப்புகளும் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருகிறது.

அதேநேரத்தில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்தன. இதையடுத்து ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்தது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்த இரு நாடுகளும் நல்ல உறவைக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 22வது மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கியது.

இரண்டு நாட்கள் (செப்டம்பர் 15, 16) நடைபெற்ற இந்த மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புதினும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசுவார்கள் என ஏற்கெனவே சொல்லப்பட்டது.

இந்த சந்திப்பின்போது உணவு தானியங்கள், உரங்கள், மருந்துகள் தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக சர்வதேச அளவில் உணவு தானியங்கள், உரங்கள், எரிபொருளுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் கடந்த ஜூலை மாதம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.

அதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படலாம் என இரு நாடுகளும் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், புதினும், மோடியும் நேற்று (செப்டம்பர் 16) சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

ரஷ்ய அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அதிபர் புதினுடனான சந்திப்பு அற்புதமானது.

வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் இந்தியா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்.

மேலும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

மோடி புத்தக வெளியீடு: இளையராஜா ஆப்சென்ட் ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.