ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று (ஜூலை 4) காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் ரஷ்ய அதிபர் புதினும் பங்கேற்க உள்ளார்.
வாக்னர் கிளர்ச்சிக்குப் பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் இந்த உச்சி மாநாடு நடந்தது. 2017-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக சேர்ந்த இந்தியா இந்த ஆண்டு மாநாட்டு நிகழ்வை நடத்துகிறது.
ஆனால், இந்த முறை இது ஆன்லைனில் நடத்தப்படும் என்று இந்தியா அறிவித்திருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன் ரஷ்யாவில், அதிபர் புதினுக்கு எதிராக நடைபெற்ற ஆயுதமேந்திய வாக்னர் கிளர்ச்சியை அவர் வெற்றிகரமாக ஒடுக்கிய பிறகு நடைபெறும் ஒரு சர்வதேச நிகழ்வில் அவர் பங்கேற்கிறார்.
தன்னை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தோற்றுவிட்டதாக காட்டத் துடிக்கும் புதினுக்கு, அனைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தனது அரசாங்கத்துக்கான சவால்கள் அனைத்தையும் திறம்பட அடக்கிவிட்டதாகவும் உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு உதவும் என்று நம்புகிறார்.
இதுகுறித்து, பேசியுள்ள வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனம் எனப்படும் அமைப்பின் இயக்குநர் மைக்கேல் கூகல்மேன்,
“இந்தக் கூட்டம், உலகளவில் புதின் தனது வலிமையையும் நம்பகத்தன்மையையும் முன்வைக்க கிடைத்திருக்கும் சில வாய்ப்புகளில் ஒன்றாகும்” என கூறியிருக்கிறார்.
அதேபோல் இது இந்தியாவுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பாக அமையலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய-ரஷ்ய உறவு வலுவாக இருந்து வருகிறது.
ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா சாதனை அளவில் சேகரித்து வைத்திருக்கிறது. மேலும், தனது 60% பாதுகாப்பு தளவாடங்களுக்கு ரஷ்யாவையே இந்தியா நம்பியுள்ளது.
மேலும் சில நாட்களுக்கு முன்புதான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையே வலுவான புதிய உறவுக்கான திட்டங்களில் கையெழுத்திட்டார்.
இந்தப் பின்னணியில் ரஷ்ய-சீனாவுடனான உறவை இந்தியா எவ்வாறு கொண்டு செல்லப் போகிறது என்பதையும் உலக நாடுகள் கூர்ந்து கவனிக்க தயாராகியுள்ளது.
தக்காளி மட்டுமல்ல… அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்வு!
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் : வரலாறு படைக்குமா இந்தியா?