-கயல் Purpose of the youth entering the Parliament
மக்களை விழிப்படையச் செய்த போராட்டம்!
ஏப்ரல் 8 – 1929 பிரிட்டிஷ் ஆட்சியின் இந்திய பாராளுமன்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வெடிகுண்டை பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் அவைக்கு நடுவே வீசி “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற பிரசுரத்தை வீசி எரிந்து இந்திய விடுதலைப்போரை புரட்சிகர நோக்கத்திற்கு உயர்த்திச் சென்ற நிகழ்வு நடந்து 94 ஆண்டுகள் ஆகின்றது.
அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாட்டு மக்களை விழிப்படையச் செய்த உன்னதப் போராட்டம். அவர்களுக்குத் தெரியும் தாங்கள் கைது செய்யப்பட்டு கொல்லப்படுவோம் என்று. தெரிந்துதான் அத்தகைய நோக்கத்திற்கு தங்களை ஒப்புவித்துக் கொண்டனர். தங்களது மரணம் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெகுண்டெழச் செய்யும் என்பதுதான் அவர்களது நோக்கம்.
தற்போது அத்தகைய லட்சிய நாயகனை ஆதர்சமாகக் கொண்ட நாட்டுப் பற்றுமிக்க இளைஞர்கள் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களை விழித்தெழச் செய்யும் விதமாய் மீண்டும் அது போன்றதொரு நிகழ்வை நடத்திக் காட்டி கைதாகியிருக்கிறார்கள்.
டிசம்பர் 13, நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் விவாதத்தின்போது, பார்வையாளர்கள் அரங்கிலிருந்து குதித்த இரண்டு இளைஞர்கள்,வண்ண நிற புகைக் குண்டுகளை நாடாளுமன்றத்திற்குள் வீசி “சர்வாதிகார ஆட்சி ஒழிக, ஜெய் பீம்” என்று முழக்கமிட்டு எம்.பிக்களின் மேசைகளில் ஏறி ஓடிய காட்சிகளையும் மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் உட்பட இரண்டு இளைஞர்கள் புகைக்குண்டுகளை வீசி சர்வாதிகார ஆட்சி என்றும் மணிப்பூர் கலவரம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக உரத்தக் குரலில் முழக்கமிட்டதும் நாட்டு மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வண்ணப் புகையை வீசி முழக்கமிட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே முழங்கிய நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே ஆகியோர் Unlawful Activities (prevention) Act (UAPA) வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களுக்கு தங்க இடம்கொடுத்த விக்கி சர்மா என்பவரும் அவரது மனைவியும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசால் தேடப்பட்டுவந்த லலித் ஜா என்ற இளைஞரும் டெல்லி போலீசிடம் சரணடைந்துள்ளார்.
யார் இந்த இளைஞர்கள்?
நாடாளுமன்றத்தில் மஞ்சள் நிற புகைக் குப்பியை வீசிய மைசூரைச் சேர்ந்த 33 வயதுடைய மனோரஞ்சன் பொறியியல் பட்டதாரியும் முன்னாள் ஐ.டி ஊழியரும் ஆவார். மேலும், மோடி ஆதரவாளர் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்.
நாடாளுமன்றத்தில் நுழைந்த மற்றொரு நபர் 23 வயதுடைய சாகர் சர்மா. இவர் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். குடும்ப வறுமை காரணமாக 12ம் வகுப்பிற்கு மேல் தனது படிப்பை தொடர முடியாமல் பெங்களூரில் வேலை தேடிச் சென்றவர்.
பிறகு கொரோனா காலத்தில் வேலை பறிக்கப்பட்டதையடுத்து சொந்த ஊருக்கே சென்று ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். பகத்சிங்கின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கம் எழுப்பிய 25 வயதான மாகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஷிண்டே, விவசாயியின் மகனாவார். இந்திய ராணுவத்திலோ அல்லது போலீஸ் துறையிலோ சேர வேண்டும் என்ற லட்சியம் கொண்டவராக இருந்துள்ளார்.
“ராணுவத்திற்கும்,காவல்துறைக்கும் வேலைக்கு பலவாறு முயன்ற நிலையில், தற்போது அவனுக்கு வயது கடந்துவிட்டதால் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டான்’’ என்று அவரது தந்தை பேட்டியளித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமெழுப்பிய மற்றொருவர் நீலம் ஆசாத். 42 வயதான நீலம் ஆசாத், BA,MA,B.ED,M.ED,CTET,M.Phil, ஆகிய பட்டங்களை பெற்றவரும், NET தேர்வில் தேர்ச்சி பெற்றவரும் ஆவார்.
ஆனால், இத்தகைய தகுதிகள் பெற்றிருந்தபோதும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையின்மை குறித்து தனது குடும்பத்தினரிடமும் கூறி வந்துள்ளார். மேலும், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஆகிய போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
நாடாளுமன்ற வாசலில் நீலம் போலீசால் கைது செய்யப்படும்போது, “என் பெயர் நீலம். இந்த இந்திய அரசு எங்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கிறது. எங்களின் உரிமைகளுக்காகப் பேச முடியவில்லை, காவல்துறை லத்தி சார்ஜ் செய்து எங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைத்து சித்திரவதை செய்கிறது.
எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு எந்த ஊடகமும் இல்லை. நாங்கள் எந்த சங்கம் அல்லது குழுக்களை சேர்ந்தவர்களும் இல்லை. நாங்கள் சாதாரண மக்கள், நாங்கள் மாணவர்கள், நாங்கள் வேலையில்லாதவர்கள்” என்றே முழங்கியுள்ளார்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் சமூக வலைதளத்தில் பகத்சிங் சமூக பக்கத்தின் (Bhagat Singh Fan Club) வழியே நண்பர்களாகியுள்ளனர். தற்போது இந்த பக்கத்தை போலீசார் முகநூலில் இருந்தே நீக்கியுள்ளனர்.
சர்வாதிகாரத்தை ஏற்கமாட்டோம், அரசியலமைப்பை பாதுகாப்போம், படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, உரிமைக்கான போராட்டங்களை அடக்கி ஒடுக்கி சிறையில் தள்ளும் ஆட்சி நடக்கிறது” என்றே அவர்கள் முழங்கினார்கள்.
விவசாயிகளின் போராட்டங்கள் தொடங்கி மணிப்பூர் சம்பவம் வரை மக்களுக்கு அரசு துரோகம் செய்கிறது என்பதை கவனப்படுத்தவே நாங்கள் இந்த அதிரடி கவன ஈர்ப்புச் செய்தோம்’’ என அவர்கள் கூறியுள்ளனர். சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம், நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவோம் என்பதே அவர்களது இறுதி முழக்கமாக இருந்தது.
தீவிரவாத செயலா? Purpose of the youth entering the Parliament
கோடான கோடி மக்களின் நெஞ்சுக்குள் அழுந்திக் கிடந்த எதிர்ப்புக் குரலை நாடாளுமன்றத்தில் அதிரடியாக ஒலிக்கச் செய்துள்ள இளைஞர்களின் செயல்பாடு ஊடகங்களிலும், எதிர்க்கட்சியாலும் ஒரு தீவிரவாத செயலாக சித்தரிக்கப்பட்டு வருவதுதான் மிகக் கொடுமையாக உள்ளது. தங்களின் செயல்பாட்டின் வழியே அவர்கள் உருவாக்க முயன்ற அரசியல் விவாதம் வேறு, அதை எதிர்க்கட்சிகள் கொண்டு செல்லும் திசை வேறாக உள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி எதற்காக தங்களை ஆதரிக்க வேண்டும் என்று முழங்குகிறார்களோ அதையேதான் அந்த இளைஞர்களும் செய்துள்ளனர். ஆனால் அதை, பாராளுமன்றத்திற்கு பாதுகாப்பில்லை என்கிறது எதிர்க்கட்சிகள்.
125 நாடுகளை உள்ளடக்கிய உலகளவிலான பட்டினிக் குறியீட்டில் 111 வது இடத்தில் இந்தியா உள்ளது. அதே சமயம் உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் அதானியும், அம்பானியும் போட்டி போட்டுக்கொண்டு முதல் 20 இடங்களுக்குள் உள்ளனர். ஆசிய அளவில் முதல் 10 இடங்களில் முதல் இரண்டு இடங்கள் முகேஷ் அம்பானியும், கவுதம் அதானியும், 10 வது இடத்தில் சிவ் நாடாரும் உள்ளனர்.
அதிகரித்த பணக்காரர்கள் பட்டியல்
இந்த சொத்து மதிப்புகள் மிகக் குறுகிய காலத்தில் உருவானவைகளாகும். ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஒரு அறிக்கை கொரோனா காலத்தில் சுமார் 22 ஆயிரம் இந்தியர்கள் மருத்துவ செலவினங்களின் சுமை தாங்காமல் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர் என்கிறது. ஆனால், இந்த காலகட்டத்தில்தான் அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் வகித்தார் என்பது முக்கியமானது.
மேலும் 2022 இல் வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை இந்த ஏற்றத்தாழ்வை பகிரங்கமாகவே மக்கள் மத்தியில் உடைத்தது. 2021 இல் 102 ஆக இருந்த இந்திய பணக்காரர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 2022 இல் 142 ஆக உயர்ந்தது என்கிறது. அதே சமயம் 2020 இல் 4.6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்கிறது. ஆனால், இப்படி செல்வம் கொழிப்பவர்களுக்குத் தான் கார்ப்பரேட் வரியை 30% இருந்து 22% சதவீதமாக 2019 இல் மோடி அரசு குறைத்தது. மக்களுக்கோ ஜிஎஸ்டி உயர்ந்தது.
மேலும் படித்த இளைஞர்கள் வேலை இன்றி அலைவதும் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடித்த பின் வேலை தேடி அலுத்துப் போனவர்கள் சில ஆண்டுகள் கழித்து வேலை தேடுவதையே நிறுத்திக் கொண்டார்கள் என்கிறது மத்திய புள்ளியியல் துறையின் தேசிய மாதிரி சர்வே. இந்த உண்மையை வெளியிட முட்டுக்கட்டை போட்ட மோடி அரசை எதிர்த்து அறிக்கையை துணிச்சலாக வெளியிட்ட இரண்டு அதிகாரிகள் பதவி விலகியது நாட்டின் உண்மையான நிலைமையை வெளிச்சம் போட்டு காண்பித்தது.
இது மட்டுமல்லாமல் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளின் போராட்டம், மணிப்பூர் வன்முறை, மல்யுத்த வீரங்கனைகளின் போராட்டம், டெல்லியில் சங் பரிவாரம் நடத்திய வன்முறை, மாட்டுக்கறி சாப்பிட்டனர் என்று நடத்திய கும்பல் படுகொலைகள், குஜராத் கலவரத்தில் குற்றவாளிகளை விடுவித்தது. அயோத்தி தீர்ப்பு, 370 சட்டப் பிரிவு நீக்கம், பேராசிரியர்கள், அறிவு ஜீவிகள் படுகொலை மற்றும் சிறையில் அடைத்தல் போன்றவை, பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஆர். எஸ். எஸ். தாக்குதல் இன்னும் எண்ணற்றவை… இந்த நாட்டில் ஜனநாயகம் அதன் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியும், ஏற்றத்தாழ்வுகள் இந்த நாட்டை இரு கூறுகளாக்கியுள்ளது என்பதையும் காட்டுகின்றன.
எதிர்க்கட்சிகளின் செயல்பாடு
இப்படி இத்தகைய விளைவுகளிலிருந்துதான் இந்த இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள காரணமாக உள்ளன.
ஆனால் எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த இந்த இளைஞர்களை பலிகொடுக்க முனைந்துள்ளன. அதற்கு அவர்கள் இட்ட பெயர் “பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல், நாடாளுமன்றத்தின் மாண்பு போனது, பாதுகாப்பின்மையில் மோடி அரசு கோட்டை விட்டது, நாடாளுமன்றத்தை காக்கத் தவறிய மோடி நாட்டை எப்படி காப்பார்” என்று பாஜக எவ்வாறு செயல்படுமோ அதே போல எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. நாட்டுக்கே பாதுகாப்பில்லை என்பதுதான் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் வெளிப்பாடு. நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளோ தங்களுக்கு பாதுகாப்பில்லை என்று கதறுகிறார்கள். ஒரே ஒரு ஆறுதல் ராகுல் காந்தி இது ஒரு போராட்ட வடிவம் என்று இளைஞர்களை ஆதரித்துள்ளார்.
போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் அமைப்பான ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவில்லை என்றால் மகா பஞ்சாயத்தை கூட்டிப் போராடுவோம் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளே, பாஜக வழியை பின்பற்றப் போகிறீர்களா? இல்லை இளைஞர்களின் நோக்கத்தை ஏந்தி போராடப் போகிறீர்களா?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 முதல் மூன்று புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி!
உச்சநீதிமன்ற தொடர் விடுமுறை: பொன்முடி மேல்முறையீட்டில் தாமதமா?
ஜி.எஸ்.டி. படிவம்: 27-ம் தேதி வரை கால அவகாசம்!
பியூட்டி டிப்ஸ்: குளிர்காலத்தில் கூந்தலைப் பராமரிப்பது எப்படி?
Purpose of the youth entering the Parliament