புரட்சி என்கிற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என்றும், எடப்பாடி பழனிசாமி புரட்சித் தமிழரல்ல… துரோக தமிழர் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சையில் இன்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “மதுரையில் நடைபெற்றது எழுச்சி மாநாடு இல்லை. அது பழனிச்சாமி கம்பெனிகளுக்கான வீழ்ச்சி மாநாடு.
முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் 15 லட்சம் பேர், 20 லட்சம் பேர், 25 லட்சம் பேர் அழைத்து வருகிறோம் என்று கூறினார்கள்.
ஆனால் இவ்வளவு பணம் செலவு செய்தும், வண்டி வாகனம் ஏற்பாடு செய்தும் ஒரு வாகனத்திற்கு 5 பேர் மட்டுமே வந்ததாக அங்கு உள்ளவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தப்பட்டார்கள்.
புரட்சி தமிழர் பட்டம்?
புரட்சி என்கிற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். துரோக தமிழர் என்றும், துரோகத்திற்கு எடுத்துக்காட்டான தமிழர் என்று அவருக்கு பட்டம் கொடுக்கலாம்.
எடப்பாடி அப்படி என்ன புரட்சி செய்து விட்டார், காலில் விழுந்து பதவி பெற்றுக்கொண்டது, பதவியில் நீடிக்க காரணமாக இருந்த பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு துரோகம் செய்தது.
தவறாக ஈட்டிய பணபலத்தால் கட்சியை கபளீகரம் செய்தது தான் சாதனை என்று, அவருக்கு பட்டம் கொடுக்கலாம். அது வெட்கக்கேடான செயல்.
முதல்வர் பேசுவது எல்லாம் காமெடியாகவே இருக்கிறது. பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் எதற்கெல்லாம் எதிர்த்து ஸ்டாலின் குரல் கொடுத்து, சாலையில் போராட்டம் செய்தாரோ, அதையெல்லாம் இப்போது ஹிட்லர் போல் அதை நிறைவேற்றி வருகிறார்.
அவர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மக்கள் அவர்களுக்கு ஆட்சி பொறுப்பு கொடுத்ததே தவறு என்று நினைக்கும் அளவுக்கு தான் நிலை உள்ளது.
பழனிச்சாமிக்கும் ஸ்டாலினுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இரண்டு பேரும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள் போல் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்று சக்தியாக வருங்காலத்தில் அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
யாருடன் கூட்டணி?
பாஜகவுடன் எப்போதும் எனக்கு உறவு இல்லை. அதில் சில நண்பர்கள் தான் இருக்கிறார்கள். தனியாக நிற்கும் போது நாங்கள் தான் தலைமை. கூட்டணியில் நிற்கும் போது தேசிய கட்சிகள் தலைமையில் தான் கூட்டணி அமைப்போம்.
தற்போது ஜெயலலிதாவும், கலைஞரும் உயிரோடு இல்லை. எனவே நான் கூட்டணியில் இருந்தால் தேசிய கட்சியின் தலைமையில் தான் இருப்பேன்.
தேர்தலுக்கான கூட்டணி என்பது யாரை வரவிடக்கூடாது என்பதற்காகத்தான். எங்களை பொறுத்தவரை தீய சக்தி திமுக எந்த நேரத்திலும் வெற்றி பெறக் கூடாது. அதற்காக எந்த கூட்டணியும் நாங்கள் ஏற்க தயாராக இருக்கிறோம். கூட்டணி இல்லை என்றாலும் நாங்கள் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம்.
நானும் – ஓபிஎஸ்யும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். வரும் காலத்தில் எப்படி செயல்படுவோம் என்பது குறித்து ஒன்றாக இணைந்து முடிவு எடுப்போம்.
கிறிஸ்டோபர் ஜெமா
குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
வேலைவாய்ப்பு: டிஜிசிஏ- வில் பணி!