புரட்டாசி சனி: உதயநிதி அறக்கட்டளை செய்த சம்பவம்!
நேற்று (அக்டோபர் 7) புரட்டாசி மூன்றாவது சனிக் கிழமை என்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியா முழுதும் பெருமாள் கோயில்களில் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலும் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள்.
இந்த நிலையில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக நேற்று திருவல்லிக்கேணி பாரத்தசாரதி கோயிலில் நடத்தப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது.
என்னவென்று கேட்கிறீர்களா…
பொதுவாகவே சாதாரண சனிக்கிழமைகளிலேயே பார்த்தசாரதி கோயிலில் கூட்டம் தாங்காது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். வீதிக்கு வெளியே வரை பக்தர்கள் வரிசையில் நின்றனர். பெருமாளை தரிசிக்க நீண்ட நேரமாக காத்து நிற்கும் பக்தர்களுக்கு, ‘உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை’ சார்பில் ஆண்டுதோறும் பிரசாதம் வழங்குவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமையான நேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
காலை நடை திறந்ததில் தொடங்கி நள்ளிரவு நடை சாத்தும் வரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கியிருக்கிறார்கள் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையினர்.
அறக்கட்டளையின் நிர்வாகி பி.கே.பாபு, அவருடன் ராஜ்குமார், நரேஷ், பிரகாஷ், ஆனந்தன், மணிகண்டன், ஸ்ரீ கணேஷ் உள்படப் பலர் பக்தர்களுக்குப் பிரசாதங்களை வழங்கினர்.
சமீபத்தில் சனாதனம் பற்றி உதயநிதி பேசிய பேச்சை, ‘இந்துக்களையே இனப் படுகொலை செய்யச் சொல்கிறார் உதயநிதி’ என்று வட இந்தியாவில் பாஜகவினர் பரப்பினர்.
அதை ஒட்டி அயோத்தி சாமியார் உதயநிதியின் தலைக்கு விலையெல்லாம் வைத்தார். இவ்வாறு உதயநிதிக்கு எதிராக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில்,..
அவற்றுக்கு பதிலை செயலாக காட்டும் வகையில் ‘திருவல்லிக்கேணி கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நள்ளிரவு வரை சத்தமின்றி பிரசாதம் வழங்கியிருக்கிறது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
-வேந்தன்
டெங்கு காய்ச்சலில் இருந்து மீள உதவுமா பாகற்காய்?
நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: கட்டணம் எவ்வளவு தெரியுமா?