பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரி லால் புரோகித் கடந்த 2021ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு மாற்றப்பட்டார். அங்கு ஆளுநருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வந்தது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீங்கள் ஏன் நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பியது.
இப்படி ஆளுநருக்கும், முதல்வர் பகவந்த் மான் அரசுக்கும் இடையே போட்டி நடந்து வந்த நிலையில், நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார் பன்வாரிலால் புரோகித்.
சமீபத்தில் நடந்த சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின், பாஜக மோசடி செய்ததாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த சந்திப்பானது நடந்தது.
இந்தசூழலில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேறு சில கடமைகளுக்காக ராஜினாமா செய்வதாகவும், இதனை தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 14-வது ஆளுநராக 2017-2021 வரை இருந்தார் பன்வாரிலால் புரோகித். அதற்கு முன்பு அவர் அசாம் மாநில ஆளுநராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Comments are closed.