நீதிமன்றங்கள் தலையிடும் வரை, முக்கிய மசோதாக்களை ஆளுநர்கள் இழுத்தடிப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 6) கேள்வி எழுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பஞ்சாப் அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி ஆஜராகி, “மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். இதுபோன்ற நிகழ்வுகள் பஞ்சாப் மாநில அரசில் இதுவரை நடைபெற்றதில்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார் அல்லது குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பி வைக்கிறார்” என்று தெரிவித்தார்.
அப்போது கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் குறுக்கிட்டு, கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் முக்கியமான மசோதாக்களை நிறுத்திவைப்பதை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியதைக் குறிப்பிட்டார். சில மசோதாக்களை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
அதேபோல தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, “ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் திரும்ப பெறாமலும் காலதாமதம் செய்து வருகிறார். ஆளுநர் தன்னை அரசியல் போட்டியாளராக கருதிக்கொண்டு அரசியலமைப்புக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறார்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், “இது நாம் கவனிக்க வேண்டிய தீவிரமான பிரச்சனை. ஆளுநர்கள் செயல்படுவதற்கு ஏன் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்? உச்சநீதிமன்றத்தை அணுகினால் மட்டுமே ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து நாம் ஜனநாயக நாடாக இருக்கிறோம்.
ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய விஷயம். அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை உணர வேண்டும். நவம்பர் 10-ஆம் தேதி தமிழ்நாடு, கேரள அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுக்களை பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து விசாரிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தலைநகரில் நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!