மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்திருக்கும் நிலையில், பஞ்சாபில் தாங்களும் தனித்து போட்டியிடுவதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ‘எங்கள் மாநிலத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். காங்கிரஸுடன் எந்த உறவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இது கூட்டணி கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணிக்கு மற்றொரு அதிர்ச்சியாக பஞ்சாபில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு முக்கிய கட்சி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் டெல்லி, பஞ்சாபில் போட்டியிடுவது தொடர்பாக ஆம் ஆத்மியும், காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்தின.
அப்போது , டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 3 தொகுதிகளையும், பஞ்சாபில் உள்ள 13-ல் 6 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர ஆம் ஆத்மி சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இன்று (ஜனவரி 24) பஞ்சாபில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள பகவந்த் மான், “பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 40 வேட்பாளர்களை ஆம் ஆத்மி தேர்வு செய்துள்ளது. வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு முன் நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறோம். 13 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறோம். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை” என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஃபகத்தின் கேங்ஸ்டர் அவதாரம் : ஆவேஷம் டீசர் வெளியானது!
‘தனித்து போட்டி’ : மம்தாவுக்கு காங்கிரஸ் பதில்!