புல்வாமா பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் உள்ள சந்தேகத்திற்குரிய விஷயங்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவரும், செய்தித் தொடர்பாளருமான சுப்ரியா ஸ்ரீனேட் இன்று (ஏப்ரல் 29) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது,
“புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வெளியிட்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், இதுவரை மோடி அரசிடமிருந்து எவ்விதமான பதிலும் இல்லை.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சந்தேகத்துக்குரிய மறைக்கப்பட்ட சில விஷயங்கள் உள்ளன.
உதாரணமாக வீரர்கள் விமானத்தில் ஏன் அனுப்பப்படவில்லை? எல்லைக்கு மிக அருகில் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எப்படி பதுக்கி வைக்கப்பட்டது? பிரதான சாலையை சந்திக்கும் மற்ற சாலைகள் ஏன் மூடப்படவில்லை?,
ஜெஇஎம்- இயக்கத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக பல உளவுத்தகவல்கள் வந்த பின்பும் அந்த சாலையில் செல்ல வீரர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்? டிஎஸ்பி தேவேந்திர சிங் இன்று எங்கிருக்கிறார்?
இது குறித்த உண்மை கடவுளுக்கு மட்டுமே தெரியும். பயங்கரவாதத் தாக்குதல் குறித்த பாரபட்சமற்ற விசாரணையின் மூலமே முழுமையான உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், என்னைப் பொறுத்தவரை புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் தனிப்பட்ட நபரான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் திரிபாதி உயிரிழக்க காரணமாக இருந்திருக்கிறது. அவரது இழப்பால் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோர் சோகமாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கருத்துப்படி, புல்வாமா தாக்குதல் மற்றும் 40 வீரர்களின் உயிர்த் தியாகம் மோடி அரசின் அலட்சியம் மற்றும் அக்கறையின்மையின் விளைவால் நிகழ்ந்துள்ளது. நமது ராணுவ வீரர்கள் கேட்ட விமானம் கிடைத்திருந்தால் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் தோல்வியடைந்திருக்கும்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பிரதமர் மோடியே உண்மையை மறைத்து, அமைதியாக இருக்குமாறு தனக்கு உத்தரவிட்டதாக ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் பல டிஜிட்டல் உரையாடல்களில் தெளிவாகக் குற்றம் சாட்டினார்.
சத்யபால் மாலிக் 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தார். இன்றைக்கு அவரது வெளிப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டாலும் அவர் சாதாரண நபர் அல்ல. 2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். ஏற்கெனவே கோவா, பீகார், மேகாலயா போன்ற மாநிலங்களின் ஆளுநராக மோடி அரசால் நியமிக்கப்பட்டவர்.
இதன்மூலம் சத்யபால் மாலிக் பிரதமர் மோடியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் என்பது தெளிவாகிறது.
2019, பிப்ரவரி 14 ஆம் தேதி மேன் வெர்ஷஸ் வைல்டு படப்பிடிப்பில் மோடி இருந்தார். புல்வாமா தாக்குதல் பற்றிய செய்தி மாலை 3.15 மணியளவில் வெளியான போதிலும், கார்பெட் தேசிய பூங்காவில் பியர் கிரில்ஸுடன் டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சியான மேன் வெர்ஷஸ் வைல்ட் நிகழ்ச்சிக்காக இரவு 7 மணி வரை தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்தார் மோடி. அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, இந்த தாக்குதல் நடந்த 2 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றினார்.
தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் உண்மை மிகவும் பயத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலின் போது, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ஜம்முவிலிருந்து 2500 வீரர்களை அனுப்ப 5 விமானங்களை சிஆர்பிஎஃப் கோரியதாகவும், அதை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் நிராகரித்ததாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதன்பின்னர் தான் 78 வாகனங்களில் சாலை மார்க்கமாக படையினர் பயணித்தனர். அதைத் தொடர்ந்து தான் உலகம் கண்ட பயங்கரமான தாக்குதல் நடந்தேறியது. 300 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற வாகனம், 40 வீரர்களை ஏற்றிச்சென்ற சிஆர்பிஎஃப் வாகனத்தின் மீது மோதியது. அவர்கள் அனைவரும் வீரமரணம் அடைந்தனர்.
பிற்பகல் 3.15 மணிக்கு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. படப்படிப்பில் இருந்த மோடிக்கு சத்யபால் மாலிக் போனில் தொடர்பு கொண்டார். அரசின் தவறால் விபத்து நடந்தது என்றும், வீரர்களுக்கு விமானம் கிடைத்திருந்தால் பயங்கரவாத சதி தோல்வியடைந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதற்கு பிரதமர் மோடியோ, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ‘இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல், நீங்கள் அமைதியாக இருங்கள்’’ என்று கூறிவிட்டு படப்பிடிப்பை தொடர்ந்தார். அமைதியாக இருங்கள் என்று சத்யபால் மாலிக்கிற்கு மோடி தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
ஆனால், தற்போது உண்மை வெளிவந்துள்ளது. நாடே அதிர்ச்சியடைந்து சில கேள்விகளுக்கு பதில் கேட்கிறது.
சத்யபால் மாலிக் பொய் சொல்கிறார் என்றால், பிரதமர் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். ஏனென்றால், அவர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு தீவிரமானது. ஆனால், அதற்குப் பதிலாக சிபிஐ மூலம் சம்மன் அனுப்பி முன்னாள் ஆளுநர் மாலிக்கை மிரட்ட முயற்சிக்கிறது அரசாங்கம்.
இந்த குற்றச்சாட்டு உண்மை என்றால், இதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும். அடிக்கடி எல்லோர் மீதும் தேசத்துரோகக் குற்றம் சாட்டுபவர்கள், இதற்கு பதில் சொல்ல வேண்டும். இது தேசத்துரோகம் இல்லாமல் வேறென்ன?
சிறு துளி தார்மீகமாவது மிச்சம் இருந்திருக்குமேயானால், இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் நீடிக்க மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது. பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் ராஜினாமா செய்யக் கோருகிறோம். இந்த முக்கியமான விஷயத்தில் பிரதமர் நிச்சயம் மவுனத்தைக் கலைக்க வேண்டும்.
புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்கள், யாரோ ஒருவரின் மகன், கணவர், தந்தை, சகோதரர் என்பதை மோடி உணரவில்லையா? அவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? அந்த 40 குடும்பங்களையும் அமைதியாக இருங்கள் என்று சொல்லப் போகிறீர்களா ?” என்று சுப்ரியா ஸ்ரினேட் கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்வம்
ராகுல் மேல்முறையீடு: மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
உயர்கல்விக்கு வழிகாட்ட புதிய திட்டம் அறிவிப்பு!