புதுக்கோட்டைக்கு 642கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடரில், புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது மட்டுமல்லாமல், புதுக்கோட்டையில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு புதுக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக 12மில்லியன் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூர் ஆதாரங்களின் மூலம் இரண்டு மில்லியன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் வழங்குவதற்கான பைப்லைன்கள் பழுதடைந்துள்ளன. அவைகள் விரைவாக மாற்றப்பட்டு வருகின்றன.
அதேபோல புதுக்கோட்டைக்கு 642கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்திட்டம் செயல்படுத்த விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு தமிழகத்தில் 28 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 6மாநகராட்சிகள் பெருநகர மாநகராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
3லட்சம் மக்கள் தொகை இருந்தால் மாநகராட்சியாக மாற்றலாம். தற்போது 1,68,000பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம்உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த உள்ளாட்சி தேர்தலின் போது ஆய்வு செய்யப்படும் என்று பதிலளித்தார்.
இதேபோன்று கோவை தெற்கு தொகுதியில் மசல் லேஅவுட் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்திருக்கிறது. தூர்வார இயல வில்லை. நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
கால்வாயை தூர்வார மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருகிலுள்ள வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள். காலி செய்ய வேண்டியது இருப்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தற்போது கோவையில் சாலைகள் அமைக்க 72கோடிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.
கலை.ரா
முன்னாள் எம்பி மஸ்தான் கொலை: தம்பி கைது!
உங்கள் வீட்டில் பொங்கல் திரைப்படங்கள்!