புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது மதில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட ராமானுஜம் நகர் முதல் வசந்தம் நகர் வழியாக தேங்காய்திட்டு பிரதான வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் திருவண்ணாமலை பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை வசந்தம் நகர் மூன்றாவது வீதி பகுதியில் உள்ள வாய்க்கால் சீரமைக்கும் பணியானது நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக வாய்க்காலை ஒட்டி மின்துறையில் உள்ள 7-அடி உயரம் கொண்ட மதில் சுவர் சரிந்து விழுந்தததில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், 6-பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாக்கியராஜ்(48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலமுருகன், அந்தோனி ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து பேரில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாய்க்காலில் இருந்து தூர் வாரிய மண்ணை மதில் சுவர் ஒட்டி கொட்டியதன் காரணமாக பாரம் தாங்காமல் மதில் சுவர் இடிந்து விழுந்ததாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீயணைப்பு துறை மற்றும் முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு!
Aadujeevitham: படைத்த புதிய சாதனை… யாராலும் தடுக்க முடியாது போல!